பழங்குடியினர் முன்னேற்றத்துக்கு தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்கும் - அமைச்சர் கே.என்.நேரு


பழங்குடியினர் முன்னேற்றத்துக்கு தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்கும் - அமைச்சர் கே.என்.நேரு
x
தினத்தந்தி 21 Nov 2022 8:27 PM GMT (Updated: 22 Nov 2022 6:02 AM GMT)

பழங்குடியினர் முன்னேற்றத்துக்கு தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்கும் என்று கருமந்துறையில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

சேலம்

சேலம்,

நலத்திட்ட உதவிகள்

கருமந்துறையில் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், கள்ளக்குறிச்சி எம்.பி. பொன்.கவுதம சிகாமணி, வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு சின்னகல்ராயன் மலை வடக்குநாடு, தெற்குநாடு, பெரியகல்ராயன் மலை கீழ் நாடு, மேல் நாடு மற்றும் மலையாளப்பட்டி பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரம் பழங்குடியினருக்கு நல வாரிய அட்டைகள், கூட்டுறவுத்துறை சார்பில் 213 பேருக்கு ரூ.2.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள், சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகள் என மொத்தம் 2 ஆயிரத்து 232 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 23 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

தேர்தல் வாக்குறுதிகள்

தமிழக மக்களின் நலனுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, பழங்குடியினர் நலத்துறைக்கென தனிக்கவனம் செலுத்தி அவர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மலைவாழ் பகுதிகளில் வாழும் மக்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று 1½ ஆண்டுகளில் தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகள் மட்டுமல்லாமல், அறிவிக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார். அதில் பள்ளி குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி திட்டமும் அடங்கும். மேலும், வேளாண்மைத் துறைக்கென தனியாக ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

100 சதவீதம் நிதி

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.2.77 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகள் கருமந்துறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் தனிநபர் கிணறு அமைப்பதற்கு மத்திய அரசு 25 சதவீதமும், மாநில அரசு 75 சதவீதமும் நிதி வழங்கி வருகிறது. அவற்றில் ரூ.3.50 கோடி நிதி இப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பழங்குடியினர் நலத்திட்டங்களுக்கு 100 சதவீதம் நிதியை தமிழக அரசே வழங்கி வருகின்றது.

தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்தபோது, 17-க்கும் மேற்பட்ட நல வாரியங்கள் உருவாக்கப்பட்டது. அந்தவகையில் தற்போது பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் தங்களது வாழ்வில் முன்னேற தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்கும். .

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சிவலிங்கம், ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா, பழங்குடியினர் நலன் திட்ட அலுவலர் அன்பழகன், தெற்குநாடு ஊராட்சிமன்ற தலைவர் பூங்கொடி, பெத்தநாயக்கன்பாளையம் மத்திய ஒன்றிய தி.மு.க செயலாளர் வெள்ளாளப்பட்டி வி.எஸ். மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்துலிங்கம், மனோகரன், வாழப்பாடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.சி.சக்கரவர்த்தி, வாழப்பாடி பேரூராட்சி தலைவர் ச.கவிதா, கல்ராயன் மலை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் வெள்ளச்சி சந்திரன், பெரிய கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன், துணைத்தலைவர் ஆறுமுகம், ஒன்றிய குழு உறுப்பினர் சித்ரா கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story