திருப்பத்தூரில் 145 விவசாயிகளுக்கு ரூ.3¾ கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்

திருப்பத்தூரில் 145 விவசாயிகளுக்கு ரூ.3¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் 145 விவசாயிகளுக்கு ரூ.3¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
விவசாய எந்திரங்கள் வழங்கும் விழா
திருப்பத்தூரில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் உள்ளிட்ட விவசாய எந்திரங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் விவசாயிகளுக்கு விவசாய எந்திரங்களை வழங்கி பேசியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த வழியில் விவசாய மக்களின் நலன் காக்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது விவசாய தொழிலை மேலைநாடுகளுக்கு இணையாக நவீன தொழில் நுட்பங்களுடன் கிடைப்பதற்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
மேலும் விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில் அதற்கான நிதி ஆதாரங்களை கூட்டுறவுத்துறை மூலம் வழங்கும் வகையில் கடந்த ஆண்டு ரூ.12 ஆயிரம் கோடி அளவில் பயிர்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கு கூடுதலாக ரூ.13 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டும் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பயிர் கடன் வழங்குவதற்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் கூட்டுறவுத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரூ.3¾கோடியில் நலத்திட்டங்கள்
எனவே பயிர்க்கடன் பெறுவதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் மாவட்ட கலெக்டர் அல்லது கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளரை நேரில் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம். இதேபோல் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் மலைபயிர்கள் துறை, வேளாண் பொறியியல் துறை ஆகிய துறைகள் மூலம் பல்வேறு திட்டங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளும் வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் திருப்பத்தூரில் மொத்தம் 145 விவசாயிகளுக்கு தலா ரூ.2 லட்சத்து 12 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் விவசாய எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். விழாவில் திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார், வேளாண்மைத்துறை துணை இயக்குனர் பன்னீர்செல்வம், தோட்டக்கலை உதவி இயக்குனர் ரேகா மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






