முதல்-அமைச்சர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


முதல்-அமைச்சர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமாக உள்ளார், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி மையங்களில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி, சென்னை எழும்பூர் குடும்பநல பயிற்சி நிலையத்தில் நேற்று நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அதில் இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

24 மணி நேரத்துக்குள்...

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் தவணை 95.27 சதவீதமும், 2-ம் தவணை 87.35 சதவீதமும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மட்டும் தொடர்ந்து தொய்வு இருந்து வருகிறது. கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட வேண்டுமென்பதால் பொதுமக்கள் பெரும்பாலும் விருப்பம் காட்டவில்லை.

மத்திய அரசு நேற்று முன்தினம், சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 30-ந் தேதி வரை 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக வழங்க அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளிவந்த அடுத்த 24 மணி நேரத்துக்குள் தமிழகத்தில் இத்திட்டம் செயல்பாட்டுக்குள் வந்திருக்கிறது.

தடுப்பூசி முகாம்

இதற்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாக மெகா தடுப்பூசி முகாம்கள் ஒரு வாரம் விட்டு வாரம் நடத்தப்பட உள்ளன. அந்த வகையில் வருகிற 24-ந் தேதி தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன.

தமிழகத்தில் முதல் தவணையாக 32 லட்சம் பேரும், 2-ம் தவணையாக 99 லட்சம் பேரும் தடுப்பூசியும், 3 கோடியே 45 லட்சம் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளாமல் இருக்கின்றனர். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மு.க.ஸ்டாலின் உடல்நிலை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை நன்றாக உள்ளது. இன்று அல்லது நாளை வீட்டுக்கு திரும்பிவிடுவார். ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பார். இந்தியாவில் குரங்கம்மை வேகமாக பரவுவதால் பன்னாட்டு விமானநிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கருமுட்டை விவகாரத்தில் 2 ஸ்கேன் சென்டர்கள் மூடப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட 4 ஆஸ்பத்திரிகளையும் 15 நாட்களுக்குள் மூடுவதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார், எம்.எல்.ஏ. பரந்தாமன், மாநகராட்சி மருத்துவ அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story