பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மனோ தங்கராஜ் திடீர் ஆய்வு


பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மனோ தங்கராஜ் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 22 April 2023 6:45 PM GMT (Updated: 22 April 2023 6:46 PM GMT)

பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மனோ தங்கராஜ் திடீரென ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி

தக்கலை,

பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மனோ தங்கராஜ் திடீரென ஆய்வு செய்தார்.

பொதுமக்கள் புகார்

தக்கலையில் பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு ஆய்வகம், ரத்த வங்கி, அறுவை சிகிச்சை கூடம், எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன. இந்த மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இருந்தும் அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு வருவதில்லை என்றும், சில நேரங்களில் வருகை பதிவேட்டில் கையெழுத்து போடப்பட்டிருந்தாலும் அவர்கள் அங்கு இருப்பதில்லை என பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன.

திடீர் ஆய்வு

இந்த புகாரின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று காலையில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் திடீரென மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரும் வந்திருந்தார்.

அவர்கள் முதலில் மருத்துவ அலுவலரின் அறைக்கு சென்று வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தனர். அதில் பல முக்கிய டாக்டர்கள் வரவில்லை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து பொறுப்பு மருத்துவ அலுவலரான ஞானகுருவேலனிடம் அமைச்சர் மனோதங்கராஜ் கேட்ட போது அவர்கள் விடுப்பு எடுத்துள்ளதாக கூறினார். மேலும் பணியில் இருக்க வேண்டிய செவிலியர்கள் பலரும் விடுப்பு எடுத்துள்ளதையும் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தபோது அமைச்சர் மனோதங்கராஜ் கண்டறிந்தார்.

பின்னர் புறநோயாளிகள் பிரிவிற்கு சென்று ஒவ்வொரு அறைகளிலும் டாக்டர்கள் இருக்கிறார்களா? என பார்வையிட்டார்.

நோயாளிகளிடம் குறைகள் கேட்டார்

இதுபோல் உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து குறைகள் கேட்டறிந்தார். அதன் பிறகு அமைச்சர் மனோதங்கராஜ் கூறும்போது, 'மருத்துவ பணியானது உன்னத பணி என்பதை உணர்ந்து சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு அர்ப்பணிப்போடு அனைவரும் பணியாற்ற வேண்டும். ஏழைகளுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலோடு பல்வேறு வசதிகள் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏழைகள் பயன்பெற வேண்டும் என்கிற உன்னத நோக்கத்திற்கு ஏற்ப டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் பணியாற்ற வேண்டும்' என்றார்.

இந்த ஆய்வின்போது பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள் சோபன், நகர தி.மு.க. செயலாளர் ரயிஸ் சுபிகான் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.


Next Story