சோலையார் ஆற்றுப்பகுதியில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு


சோலையார் ஆற்றுப்பகுதியில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு
x
தினத்தந்தி 22 Oct 2023 7:30 PM GMT (Updated: 22 Oct 2023 7:31 PM GMT)

தண்ணீரில் மூழ்கி 5 மாணவர்கள் உயிரிழந்த சோலையார் ஆற்றுப்பகுதியில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கோயம்புத்தூர்
தண்ணீரில் மூழ்கி 5 மாணவர்கள் உயிரிழந்த சோலையார் ஆற்றுப்பகுதியில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


அமைச்சர் ஆய்வு


கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையார் சுங்கம் ஆற்றில் கடந்த 20-ந் தேதி தண்ணீரில் மூழ்கி 5 மாணவர்கள் உயிரிழந்தனர்.


இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் வால்பாறை பகுதியில் ஆபத்தான நீர்நிலைகள் குறித்தும், அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்ய நேற்று அமைச்சர் முத்துசாமி வந்தார். பின்னர் அவர், தண்ணீரில் மூழ்கி 5 மாணவர்கள் உயிரிழந்த சோலையார் சுங்கம் ஆற்றில் ஆய்வு செய்தார்.


அறிவிப்பு பலகை


இதற்கிடையில் அந்த ஆற்றுப்பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு தடை விதித்து நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. இதை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார். மேலும் இதுபோன்ற அறிவிப்பு பலகைகளை ஆபத்தான அனைத்து நீர்நிலைகளிலும் வைக்க உத்தரவிட்டார்.


இதையடுத்து வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள், நகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.


அறிக்கை


அப்போது அமைச்சர் முத்துசாமி பேசியதாவது:-


அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை அமைத்து, ஆபத்தான நீர்நிலைகளை கண்டறிந்து, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.


தேவைப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும். ஒலிபெருக்கி வசதியுடன் கூடிய கண்காணிப்பு கோபுரம் அமைத்து, போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவினர் பணியமர்த்த வேண்டும். ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகிக்க வேண்டும்.


வனத்துறையினர் தெரிவித்த 20 ஆபத்தான இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், வால்பாறையில் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.


இவ்வாறு அவர் பேசினார்.


பரிசு


தொடர்ந்து, ஆற்றில் மூழ்கி பலியான மாணவர்களின் உடல்களை 1 மணி நேரத்தில் மீட்ட போலீசார், தீயணைப்பு வீரர்களுக்கு பரிசு வழங்கினார்.


இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணை தலைவர் செந்தில்குமார், பொள்ளாச்சி போலீஸ் உதவி சூப்பிரண்டு பிருந்தா, நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) பெர்ப்பெற்றிடெரன்ஸ்லியோன், தாசில்தார் அருள்முருகன், தி.மு.க. நகர செயலாளர் சுதாகர், நீர் வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் தண்டபாணி, வனச்சரக அலுவலர்கள் மணிகண்டன், வெங்கடேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story