சர்வாதிகார போக்கில் திணிக்கப்படும் கருத்துக்களை பின்பற்ற மாட்டோம்-அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு


சர்வாதிகார போக்கில் திணிக்கப்படும் கருத்துக்களை பின்பற்ற மாட்டோம்-அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு
x
தினத்தந்தி 18 Aug 2022 9:14 PM GMT (Updated: 18 Aug 2022 9:15 PM GMT)

சர்வாதிகார போக்கில் திணிக்கப்படும் கருத்துக்களை பின்பற்ற மாட்டோம் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

மதுரை

சர்வாதிகார போக்கில் திணிக்கப்படும் கருத்துக்களை பின்பற்ற மாட்டோம் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

நலத்திட்ட உதவிகள்

மதுரை மத்திய சட்டசபை தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, எஸ்.எஸ்.காலனியில் உள்ள ஒரு தனியார் மகாலில் நேற்று நடந்தது. கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு 586 பயனாளிகளுக்கு ரூ.93 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:-

தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு திட்டங்கள் முழுமையாக சென்று அடைய வேண்டும் என்ற நோக்கில் சமூக நீதி கொள்கையோடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒரு சமுதாயத்திற்கு கலாச்சாரமும் மொழியும் எவ்வளவு முக்கியமோ, ஒரு அரசியல் கட்சி இயக்கத்திற்கு கொள்கையும் தத்துவமும் எவ்வளவு முக்கியமோ, அதைவிட பொதுவாழ்க்கையில் உள்ள அரசியல்வாதிகளுக்கு மனிதநேயமும், செயல்திறனும் முக்கிய குணநலன்கள் ஆகும். சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி அவர்களுக்கு சமவாய்ப்பு வழங்கி வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதில் அரசுக்கும், அரசு சார்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கும் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது.

மனித நேயம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு மக்கள் நலனை கருத்திற்கொண்டு மனிதநேயத்துடன் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பான செயல்திறனுடன் செயல்படுத்தி வருகிறது. அரசு திட்டங்களை மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்ப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த அரசு அனைத்துத்தரப்பு மக்களின் வளர்ச்சிக்காகவும், பொருளாதார மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காகவும் பல்வேறு சிறப்பு குழுக்களை அமைத்து அந்தந்த துறை சார்ந்த வல்லுநர்கள், அனுபவமிக்க அறிஞர்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கிடும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மக்கள் நலன் சார்ந்த ஆக்கப்பூர்வமான எந்தவொரு கருத்தையும் இந்த அரசு மனிதநேயத்தோடு ஏற்று செயல்படுத்தும். அதே நேரத்தில் சர்வாதிகாரப் போக்கில் வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் எந்தவொரு கருத்தையும் எப்போதும் பின்பற்ற மாட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விலையில்லா சைக்கிள்

இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் சுகி பிரமிளா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சவுந்தர்யா, மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வி, மாநகராட்சி கல்வி அலுவலர் நாகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் 1,010 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

============

புட்நோட்


Related Tags :
Next Story