தமிழுக்கு இணையான மொழி வேறு இல்லை


தமிழுக்கு இணையான மொழி வேறு இல்லை
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

இந்தி திணிப்பு எதிர்ப்பு கூட்டத்தில் தமிழுக்கு இணையான மொழி வேறு இல்லை என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

சிவகங்கை

திருப்பத்தூர்,

இந்தி திணிப்பு எதிர்ப்பு கூட்டத்தில் தமிழுக்கு இணையான மொழி வேறு இல்லை என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு கூட்டம்

திருப்பத்தூரில் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆனைக்கிணங்க, ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, மாநில பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பத்தூர் யூனியன் சேர்மனும், தெற்கு ஒன்றிய செயலாளருமான சண்முகவடிவேல் வரவேற்றார். மாநில இலக்கிய அணி தலைவர் தென்னவன், தலைமை கழக பேச்சாளர் ஒப்பிலாமணி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, கழக கொள்கை பரப்பு பேச்சாளர் வி.பி.ராஜன் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில், அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:- இந்தி திணிப்புகளை எதிர்த்து போராடிய அண்ணா, கருணாநிதி ஆகியோருடைய வழியில் இன்றைக்கு கட்சியையும், தமிழக அரசையும் வழிநடத்துகின்ற மு.க.ஸ்டாலினும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த பொதுக்கூட்டம்.

தமிழுக்கு இணையான மொழி

மத்தியில் ஆட்சியில் அமர்கின்றவர்களுக்கு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வருகின்றது என தெரியவில்லை. ஆனால் அதை எதிர்த்து தடுப்பதற்கு தி.மு.க. என்றைக்கும் பின்வாங்கியது இல்லை. இந்தி திணிப்பும், தமிழை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வும்தான் இன்றுவரை திராவிட இயக்கங்களின் ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. தமிழுக்கு இணையான மொழி, வேறு எந்த மொழியும் கிடையாது. தமிழுக்கு இணையான சிறப்புகளை கொண்ட எந்தமொழியும் இல்லை.

தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் உள்ள சிறப்புகளை கண்டு அவர்களால் ஜீரணிக்கமுடியவில்லை. இதனால்தான் தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் தகர்க்க வேண்டும், இதனுடைய பண்பாட்டை சிதைக்க வேண்டும், வரலாற்றை அழிக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள். அதில் ஒன்றுதான் இந்தி திணிப்பு.

தியாகங்கள்

தாய்மொழிக்காக தன்னுடைய உயிர்களை மாய்த்துகொண்ட இளைஞர்கள், வேறு எந்த மொழிக்கும் இல்லை. அத்தகைய தியாகங்கள் செய்து காப்பாற்றப்பட்ட மொழிதான் நம்முடைய தமிழ்மொழி.

எனவேதான் நமது உணர்வுகளையும், எதிர்ப்புகளையும் பதிவு செய்கிறோம் என்றார்.

கூட்டத்தில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சாமிக்கண்ணு, ஒன்றிய செயலாளர்கள் குன்றக்குடி சுப்பிரமணியன், டாக்டர் ஆனந்த் விராமதி மாணிக்கம், திருப்பத்தூர் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் இளங்கோவன், நகர செயலாளர்கள் நெற்குப்பை பழனியப்பன், கார்த்திகேயன், பேரூராட்சி தலைவர்கள் கோகிலா ராணி நாராயணன், நெற்குப்பை பொசலான், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கண்ணன், ரமேஷ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி துணை சேர்மன் கான்முகமது நன்றி கூறினார்.


Next Story