கல்லூரி மாணவிகளிடம் குறைகளை கேட்ட அமைச்சர் பொன்முடி


கல்லூரி மாணவிகளிடம் குறைகளை கேட்ட அமைச்சர் பொன்முடி
x
தினத்தந்தி 31 Aug 2023 8:45 PM GMT (Updated: 31 Aug 2023 8:46 PM GMT)

கொடைக்கானல் அரசு மகளிர் கல்லூரியில், மாணவிகளிடம் அமைச்சர் பொன்முடி குறைகளை கேட்டறிந்தார்.

திண்டுக்கல்

குறைகளை கேட்ட அமைச்சர்

கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சி அட்டுவம்பட்டி பகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கிற மாணவிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, செயலாளர் கார்த்திக் ஆகியோர் மாணவிகள், பேராசிரியர்களுடன் கலந்துரையாடினர். அப்போது மாணவிகளிடம் அமைச்சர் பொன்முடி, குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். எனவே கூடுதல் கட்டிடங்கள், விடுதிகள், போக்குவரத்து வசதி, கழிப்பறை வசதி, விளையாட்டு மைதானம், கலையரங்கம் ஆகியவை கட்டித்தர வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.

வேறுமொழி படிக்க தடை இல்லை

தற்போது உள்ள பாடத்திட்டங்களை மாற்றக்கூடாது என்றும், தமிழகத்திலேயே இந்த கல்லூரியில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வரும் பொதுப்பணியியல் துறை பாடத்திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்.

கவுரவ விரிவுரையாளர்களுக்கு அரசு உதவிகளை வழங்க வேண்டும் என்றும் மாணவிகள் வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பொன்முடி பேசும்போது கூறியதாவது:-

தமிழ்நாடு கல்வி கொள்கைக்காக தனியாக ஒரு கமிட்டி அமைக்கப்பட உள்ளது. தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக்கொள்கை அமலில் உள்ள வேளையில், வேறு மொழிகளை படிப்பதில் தவறு இல்லை. ஆனால், அதை கட்டாயப்படுத்த கூடாது. 3 ஆண்டுகள் படிக்கக்கூடிய இளங்கலை படிப்பை, 4 ஆண்டுகளாக மாற்ற முயற்சி நடந்து வருகிறது. அதனை தடுத்துள்ளோம்.

மாணவர்களுக்கு தனி கல்லூரி

தமிழ்நாடு கல்விக்கொள்கை குறித்து முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார். இதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். இருப்பினும் மாணவிகள், எதிர்காலத்தில் வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஒரே மாதிரி பாடத்திட்டங்கள் கொண்டு வரப்படும்.

கொடைக்கானலில், மாணவர்களுக்கு தனி கல்லூரி கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து கலந்து ஆலோசித்து, அடுத்த கல்வியாண்டுக்குள் புதிதாக ஆண்கள் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்வி, விளையாட்டு

உயர் கல்வித்திட்டத்தின் சார்பில் விடுதிகள் கட்டித்தரப்படும். கல்வியுடன் விளையாட்டு, போட்டித்தேர்வுகளிலும் மாணவிகள் பங்கேற்க வேண்டும். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயனடைய வேண்டும். மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும்.

பொதுப்பணியியல் துறை இந்த கல்லூரியில் மட்டும் செயல்பட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சி. அந்த மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார். இந்த கூட்டத்தில் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், தி.மு.க. நகர செயலாளர் முகமது இப்ராகிம், ஒன்றியக்குகுழு தலைவர் சுவேதாராணி கணேசன், வில்பட்டி ஊராட்சி தலைவர் பாக்கியலட்சுமி ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி முதல்வர் ஏஞ்சலின் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story