கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்
கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். துரை ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் இயற்கை மரணமடைந்ததற்காக 7 வாரிசுதாரர்களுக்கு ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான நிதியுதவியும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் 10 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான அட்டையையும் அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
ஆயிரக்கணக்கானோர் பயன்
இம்முகாமில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், நகரமன்ற துணைத்தலைவர் சித்திக் அலி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் கீதாஞ்சலி, உதவி கலெக்டர் (பயிற்சி) லாவண்யா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி, வட்டார மருத்துவ அலுவலர் பிரியா பத்மாசினி, விழுப்புரம் தாசில்தார் வேல்முருகன், காப்பீட்டுத்திட்ட மேலாளர் மஞ்சுளா, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்ட மாவட்ட திட்ட அலுவலர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இசிஜி பரிசோதனை, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளுடன் முழு ரத்த பரிசோதனையும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. இதுதவிர பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்பட்டது. இதனுடன் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இம்முகாமில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.