அமைச்சர் செந்தில்பாலாஜி கைது எதிரொலி: கரூர் மாவட்டத்தில் போலீசார் குவிப்பு


அமைச்சர் செந்தில்பாலாஜி கைது எதிரொலி: கரூர் மாவட்டத்தில் போலீசார் குவிப்பு
x

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக கரூர் மாவட்டத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கரூரில் பா.ஜ.க. அலுவலகம் மற்றும் கரூர் அருகே உள்ள அண்ணாமலை வீட்டிற்கும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரூர்

அமலாக்கத்துறையினர் சோதனை

சென்னை மற்றும் கரூரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உள்பட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்தவகையில் கரூர் அருகே ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு, கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது சகோதரர் அசோக்குமார் வீடு உள்பட கரூரில் 7 இடங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையுடன் வந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இரவு 10 மணியளவில் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு, அவரது சகோதரர் அசோக்குமார் வீடு உள்ளிட்ட 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை நிறைவு செய்தனர்.

அமைச்சர் கைது

இதில், கரூர் ஜவகர்பஜாரில் உள்ள ஒரு நகைக்கடையிலும் நள்ளிரவுவரை சோதனை நடத்தப்பட்டது.இந்நிலையில் கரூர், சென்னையில் சோதனை நிறைவடைந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.அவர் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக நேற்று காலை முதலே கரூர் மாநகரில் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் ரவுண்டானா, திருக்காம்புலியூர் ரவுண்டானா, சர்ச் கார்னர், லைட்ஹவுஸ் கார்னர், வெங்கமேடு உள்ளிட்ட இ்டங்களில் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த போலீஸ் நிலையங்களில் போலீசார் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

பா.ஜ.க. அலுவலகம்

கரூர்-மதுரை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள கரூர் மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்திலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அமைச்சர் கைது செய்யப்பட்டதன் காரணமாக கரூர் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அண்ணாமலை வீட்டுக்கு பாதுகாப்பு

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம், சின்னதாராபுரம் அருகே சூடாமணி ஊராட்சி தொட்டம் பட்டியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. அவரது வீட்டின் முன்பும் சின்னதாராபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story