அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தால் போக்குவரத்து கழகத்துக்கு நஷ்டம் ஏற்படவில்லை-சேலத்தில் அமைச்சர் சிவசங்கர் பேட்டி
அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தால் போக்குவரத்து கழகத்துக்கு நஷ்டம் ஏற்படவில்லை என்று சேலத்தில் அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
நஷ்டம் ஏற்படவில்லை
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், ஊழியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் இலவச பஸ் கட்டண திட்டத்தில் இதுவரை 132 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளனர். இந்தியாவில் வேறு எங்கும் இந்த திட்டம் இல்லை. இந்த திட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1,600 கோடி நிதி வழங்கி உள்ளார். எனவே இந்த திட்டத்தால் போக்குவரத்து கழகத்திற்கு எந்த வித நஷ்டமும் ஏற்படவில்லை.
கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்
கிராமப்புறங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000-ம் வழங்கப்படும் திட்டம் மூலம், ஏராளமான மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர். இதனால் கல்லூரிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளின் பஸ் வசதிக்காக தலைமை ஆசிரியர்களை கொண்டு தனியாக வாட்ஸ்-அப் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதில் வரும் தகவல்கள் படி தேவையான இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படும். புதிய பஸ்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. தனியார் சொகுசு பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க அவ்வப்போது ஆய்வு நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., மேயர் ராமச்சந்திரன், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, அரசு போக்குவரத்து கழக சேலம் மண்டல மேலாண்மை இயக்குனர் பொன்முடி, நிதி கட்டுப்பாட்டு அலுவலர் ராமகிருஷ்ணன், பொது மேலாளர் லட்சுமணன், முதுநிலை கண்காணிப்பாளர் ரவி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.