'அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்த மாநிலமாக உருவெடுத்து வருகிறது'; அமைச்சர் இ.பெரியசாமி பேச்சு


அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்த மாநிலமாக உருவெடுத்து வருகிறது; அமைச்சர் இ.பெரியசாமி பேச்சு
x

‘அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்த மாநிலமாக உருவெடுத்து வருகிறது’ என்று அமைச்சர் இ.பெரியசாமி பேசினார்.

திண்டுக்கல்

'அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்த மாநிலமாக உருவெடுத்து வருகிறது' என்று அமைச்சர் இ.பெரியசாமி பேசினார்.

நலத்திட்ட உதவிகள்

ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தரேவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன், ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி, துணைத்தலைவர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார் வரவேற்றார்.

இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, 3 ஆயிரத்து 747 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் சித்தரேவு அமைதிப்பூங்காவில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை அவர் திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது:-

4,500 பேருக்கு வேலைவாய்ப்பு

தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்த மாநிலமாக உருவெடுத்து வருகிறது. எந்தவொரு அரசும் செய்யமுடியாத, சிந்திக்க முடியாத பல்வேறு நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். தகுதி அடிப்படையில் நியாயமான முறையில் தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறையின் மூலம் 4 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

ஆத்தூர் பகுதியில் அடிப்படை வசதிகள் தொய்வின்றி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அய்யம்பாளையம் மருதாநதி அணையின் வடக்கு, தெற்கு கால்வாய்களில் நீண்ட நாட்களாக தண்ணீர் திறந்துவிடப்படாமல் உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட 2,500 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆத்தூர் பகுதியில் வீடு இல்லாதவர்களுக்கு ஏற்கனவே வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்துகொண்டோர்

இந்த விழாவில் திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ராமகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்திநாதன், ஆத்தூர் தாசில்தார் சரவணன், சித்தரேவு ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி, துணைத்தலைவர் எழில்மாறன், மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் லதா, துணைத்தலைவர் சுருளிராஜன், ஆத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முருகேசன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராமன், பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், மாவட்ட துணைச்செயலாளர் தண்டபாணி, ஆத்தூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், சித்தரேவு கோட்டைப்பட்டி கிளை செயலாளர் ராஜேந்திரன், சித்தரேவு ஊராட்சி செயலாளர் சிவராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.



Related Tags :
Next Story