அமைச்சர், ஒரு ரவுடி போல கல்லை வீசி எறிந்திருப்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டின் உச்சகட்டம் - ஓ.பன்னீர்செல்வம்


அமைச்சர், ஒரு ரவுடி போல கல்லை வீசி எறிந்திருப்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டின் உச்சகட்டம் - ஓ.பன்னீர்செல்வம்
x

அமைச்சர், நாற்காலிகள் போடாததால் ஆத்திரம் அடைந்து ரவுடி போல கல்லை வீசி எறிந்திருப்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டின் உச்சகட்டம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விழாவிற்கான பணிகளை பார்வையிடச் சென்ற பால்வளத்துறை அமைச்சர் நாசர் நாற்காலிகள் போடாததால் ஆத்திரம் அடைந்து ஒரு ரவுடி போல கல்லை வீசி எறிந்திருப்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டின் உச்சகட்டம் என்று தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒரு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களே சட்டம்-ஒழுங்கை சீரழிப்பது என்பது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. இந்தச் செயலை செய்துள்ள பால் வளத் துறை அமைச்சர் சா.மு. நாசருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதலில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு ஊழியர்கள் செய்ய வேண்டிய பணிகளை தி.மு.க.வினரே மேற்கொள்வது, வாக்களித்த மக்களை அமைச்சர்களே கொச்சைப்படுத்துவது, மனுக்கள் கொடுக்க வரும் மக்களை அமைச்சர் அடிப்பது, கவுன்சிலரை அமைச்சர் அடிப்பது, அரசு அதிகாரிகளை மிரட்டுவது என்ற வரிசையில், தற்போது ஓர் அமைச்சரே ரவுடி போல கல்லை வீசி எறிந்திருப்பது என்பது சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் உச்சகட்டம்.

திருவள்ளூர் மாவட்டத்தில், தி.மு.க. சார்பில் இன்று நடைபெறவுள்ள மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் பேச உள்ள நிலையில், அந்தப் பணிகளை பார்வையிட சென்ற பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் அங்கு நாற்காலிகள் போடாததால் ஆத்திரம் அடைந்து, தான் அமைச்சர் என்பதையும் மறந்து, ஒரு ரவுடி போல கல் வீச்சில் ஈடுபட்டுள்ளார் என்ற செய்தி இன்று பத்திரிகைகளில் புகைப்படுத்துடன் வெளி வந்துள்ளது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது பணிகளை மேற்கொள்வேன் என்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஓர் அமைச்சர், அதனை முற்றிலும் அவமதிக்கும் வகையில் பணிகளை மேற்கொள்வது என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படுவதற்கு சமம். தி.மு.க.வினர் மற்றும் அமைச்சர் பெருமக்களின் செயல்பாடுகளால் தூக்கமே போய்விட்டது என்று வருத்தப்பட்டு முதலமைச்சரே கூறிய நிலையில், ஓர் அமைச்சர் ரவுடி போல செயல்படுகிறார் என்றால் முதலமைச்சரின் வார்த்தையை அவர் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட ஓர் சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை என்றே மக்கள் கருதுகிறார்கள்.

சரியான கருவிகள், அதற்கேற்ற காலம், தகுந்த முறை, சிறந்த செயல்பாடு இவற்றில் சிறந்தவர் தான் அமைச்சர் என்கிறார் திருவள்ளுவர். இதற்கு முற்றிலும் முரணான வகையில் அமைச்சரின் செயல்பாடு அமைந்துள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய ஓர் அமைச்சர் சட்டம் ஒழுங்கை சீரழிக்கிறார் என்பது ஒரு வெட்கக்கேடான செயல். அமைச்சர்கள் இதுபோன்ற ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டபோது, முதலமைச்சர் வேண்டுகோள் விடுப்பதைத் தவிர்த்து கடும் நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான செயல் நடைபெற்றிருக்காது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து ஓர் அமைச்சர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பாரேயானால், அவருடைய பதவி பறி போயிருக்கும். இதுபோன்ற நடவடிக்கை தான் சட்டம்-ஒழுங்கு சீராக செயல்பட வழி வகுக்கும்.

குற்றங்களை ஆராய்ந்து எந்தவிதப் பாகுபாடுமின்றி நடுநிலையுடன் செயல்படுவதே நல்ல ஆட்சி முறை என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story