அமைச்சர் உதயநிதிக்கு எந்த தகுதியும் கிடையாது


அமைச்சர் உதயநிதிக்கு எந்த தகுதியும் கிடையாது
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சனாதன தர்மத்தை பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு எந்த தகுதியும் கிடையாது என்று சி.வி.சண்முகம் எம்.பி. கூறினார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாற்றுக்கட்சியினர், அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் விழுப்புரம் நகராட்சி 33-வது வார்டுக்குட்பட்ட வழுதரெட்டி பகுதியில் இருந்து அ.ம.மு.க. மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் கோவிந்தன், பா.ம.க. நகர நிர்வாகி செந்தில்வேலன், பூந்தோட்டம் மணி, தி.மு.க. நிர்வாகிகள் பதிநாகராஜன், சதீஷ் உள்ளிட்ட 100 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் எம்.பி. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். புதியதாக கட்சியில் சேர்ந்த அனைவரையும் சால்வை அணிவித்து சி.வி.சண்முகம் எம்.பி. வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் சக்கரபாணி எம்.எல்.ஏ., நகர செயலாளர்கள் பசுபதி, வண்டிமேடு ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், எசாலம் பன்னீர், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் டாக்டர் முத்தையன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், வளவனூர் முன்னாள் நகர செயலாளர் காசிநாதன், நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் குமரன், நகரமன்ற கவுன்சிலர்கள் கோல்டுசேகர், கோதண்டராமன், கலை, வார்டு செயலாளர்கள் நாராயணன், மனோகர், தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் மண்டல பொருளாளர் ஜெகதீஸ்வரி சத்யராஜ், பாண்டியராஜன், வார்டு பிரதிநிதி வீரப்பன், நகர மாணவர் அணி செயலாளர் அன்பு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அதன் பின்னர் சி.வி.சண்முகம் எம்.பி., நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், சனாதன தர்மத்தை எதிர்க்கிறோம் என்கிற பெயரில் சொல்லிக்கொண்டிருக்கிற உதயநிதி ஸ்டாலின், எப்படி இந்த அமைச்சர் பதவிக்கு வந்தார். சனாதன தர்மத்தில் சொல்லப்படுகின்ற, அவர்கள் எதிர்க்கின்ற ஒரு விஷயம் குலத்தொழில். இன்றைக்கு தி.மு.க.வில் தாத்தா, அப்பா, பிள்ளை வழியில் குலத்தொழிலாக பதவிக்கு வந்திருக்கிற உதயநிதி ஸ்டாலினுக்கு, சனாதன தர்மத்தை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும், அறுகதையும் கிடையாது. தி.மு.க.வே ஒரு டெங்கு, தி.மு.க. அழிந்தால்தான் தமிழகத்தில் டெங்கு ஒழியும் என்றார்.


Next Story