அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பெரம்பலூர் வருகை


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பெரம்பலூர் வருகை
x

அரசு துறைகள் தொடர்பாக நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) பெரம்பலூருக்கு வருகை தருகிறார்.

பெரம்பலூர்

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு துறைகள் தொடர்பான ஆய்வு கூட்டங்களில் கலந்து கொள்ள இன்று (திங்கட்கிழமை) வருகை தருகிறார்.

இதற்காக திருச்சியில் இருந்து கார் மூலம் பெரம்பலூருக்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை 4 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பல்வேறு அரசு துறைகள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரவு 7 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் நடைபெறும் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

பிரமாண்ட மேடை

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெரம்பலூர் வருகையையொட்டி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி., தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவருமான குன்னம் சி.ராஜேந்திரன், எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. இளைஞர் அணியினர், கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள், கட்சியின் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொ.மு.ச. நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகளும் தயார் நிலையில் உள்ளனர்.

இதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று கட்சி கொடிகள் கட்டப்பட்டும், விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளதால் பெரம்பலூர் விழாக்கோலம் பூண்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.


Next Story