முத்தப்பன்பட்டிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை வருகை
முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டி.கல்லுப்பட்டி அருகே முத்தப்பன்பட்டிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை வருகை தருகிறார்.
பேரையூர்,
முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டி.கல்லுப்பட்டி அருகே முத்தப்பன்பட்டிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை வருகை தருகிறார்.
நினைவேந்தல் நிகழ்ச்சி
தமிழக முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை(வியாழக்கிழமை) டி.கல்லுப்பட்டி அருகே உள்ள முத்தப்பன்பட்டியில் நடைபெறுகிறது. தி.மு.க. மூத்த முன்னோடிகள் 1,500 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1½ கோடி மதிப்பிலான பொற்கிழி வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை மறைந்த சேடப்பட்டி முத்தையாவின் மகனும், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் செய்து வருகிறார். இதற்காக முத்தப்பன்பட்டியில் பிரமாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஏற்பாடுகள்
நேற்று இறுதிக்கட்ட ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இன்பா ரகு, தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன், கள்ளிக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் மதன்குமார், இளைஞரணி செயலாளர் விமல், துணை அமைப்பாளர் தென்பழஞ்சி சுரேஷ், அமைப்பாளர் பரமன், ராஜசேகர், மாமன்ற உறுப்பினர் காளிதாஸ் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
இதுகுறித்து மாவட்ட செயலாளர் மணிமாறன் கூறும் போது, முத்தப்பன்பட்டிக்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருமங்கலம்-ராஜபாளையம் மெயின் ரோட்டில் உள்ள டி.குன்னத்தூரில் நாளை காலை 9 மணி அளவில் வரவேற்பு நடைபெற உள்ளது. இதில் தெற்கு மாவட்ட தி.மு.க.வை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட வார்டு, மற்றும் பல்வேறு அணி அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை கழகத்தினர், கட்சியினர் திரண்டு வரவேற்பு அளிக்க வேண்டும் என்றார்.