அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு


அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 5 Sep 2023 6:45 PM GMT (Updated: 5 Sep 2023 6:47 PM GMT)

தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

தென்காசி

தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தென்காசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முன்னதாக குற்றாலத்தில் தங்கி இருந்த அவர் நேற்று காலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டார்.

வரும் வழியில் திடீரென அவரது வாகனம் தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தது. இதுகுறித்த அறிவிப்பு எதுவும் முன்கூட்டியே கொடுக்கப்படவில்லை. யாருக்கும் அறிவிப்பு இல்லாமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீரென ஆஸ்பத்திரிக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்

புற நோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, புதிதாக அமைக்கப்பட்டு வரும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கட்டிடப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளிடம் நலம் விசாரித்த அவர், சிகிச்சை குறித்து கேட்டு தெரிந்து கொண்டார்.

பின்னர் அங்கு பணியில் இருந்த டாக்டர்கள், செவிலியர்களிடம் ஆஸ்பத்திரியின் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீரென ஆஸ்பத்திரியில் சோதனை நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆய்வு கூட்டம்

பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனைத்து அரசு துறைகளுக்கான வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

முன்னதாக அவரை மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க அவரை கலெக்டர் அலுவலகத்திற்கு அனைவரும் அழைத்துச் சென்றனர்.

கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கலெக்டர் துரை.ரவிச்சந்திரன், தனுஷ் குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், ராஜா, சதன் திருமலைகுமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ரூ.35½ கோடியில் நலத்திட்ட உதவி

கூட்டத்தில் ஒவ்வொரு துறை திட்டப்பணிகள் மற்றும் நடந்து முடிந்தவை, நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டங்கள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் இதுகுறித்து அவர் விவரங்களை கேட்டறிந்தார். இந்த கூட்டம் காலை சுமார் 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெற்றது.

கூட்டத்தில் 478 பயனாளிகளுக்கு ரூ.35 கோடியே 68 லட்சத்து 15 ஆயிரத்து 543 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

வரவேற்பு

தென்காசிக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன், தென்காசி நகர்மன்ற தலைவரும் தி.மு.க. நகரச் செயலாளருமான சாதிர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா, தென்காசி யூனியன் தலைவர் ஷேக் அப்துல்லா, மேலகரம் செயலாளர் சுடலை, மேலகரம் நகரப்பஞ்சாயத்து தலைவி வேணி வீரபாண்டியன், இலஞ்சி நகரப்பஞ்சாயத்து தலைவி சின்னத்தாய், துணை தலைவர் முத்தையா, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகநாதன், ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன், தொழில் அதிபர் மணிகண்டன், மாவட்ட கலை மற்றும் பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ஆலடி எழில்வாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story