ரேஷன் கடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு


ரேஷன் கடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு
x

பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா? என்பது தொடர்பாக சென்னையில் உள்ள ரேஷன் கடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முழுக்கரும்புடன் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1,000 ரொக்கமாக பொங்கல் பரிசுப் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி-சேலைகள் கடந்த 9-ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு பொருட்கள் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 116-வது வார்டு வெங்கட்ராம் தெருவில் உள்ள அமுதம் ரேஷன் கடையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பணியாளர்களுக்கு அறிவுரை

இந்த ஆய்வின் போது, ரேஷன் கடையில் உள்ள பதிவேடுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். மொத்தமுள்ள குடும்ப அட்டைதாரர்கள் எண்ணிக்கை, இதுவரை வழங்கப்பட்டுள்ள தொகுப்புகள் எண்ணிக்கை விபரம் ஆகியவற்றை அங்குள்ள ஊழியர்களிடம் அவர் கேட்டறிந்தார். மேலும் பணியாளர் பதிவேடு, பொருட்கள் பதிவேடு மற்றும் இருப்புப் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.

அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார். இதையடுத்து பொங்கல் பரிசுத் தொகுப்புகள் அட்டவணையின்படி முறையாக வினியோகம் செய்திடவும், அனைத்து பதிவேடுகளையும் முறையாக பராமரித்திடவும் பணியாளர்களை அவர் அறிவுறுத்தினார்.


Next Story