அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை அறிவித்தவரை கைது செய்ய வேண்டும்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை அறிவித்தவரை கைது செய்ய வேண்டும்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை அறிவித்தவரை கைது செய்து தமிழகத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
இந்தியா பெயர் மாற்றம்
சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடைமுறையில் நாம் பிராந்திய மொழியில் இந்தியாவை பாரதம் என்று பேசுவது தான் பழக்கம். இந்திய அரசியல் சாசனத்தில் ஒரு இடத்தில் மட்டும் தான் 'பாரத்' என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகார பூர்வமாக நம் நாட்டை இந்தியா என்று தான் அழைக்கின்றோம்.
என்னைப்பொறுத்தவரை பாரதம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதில் எந்த தவறும் கிடையாது. ஆனால் அவர்கள் அலுவலாகவே பயன்படுத்தப்போகிறார்களா? என்பது எனக்கு தெரியாது. அவ்வாறு முடிவு செய்தால் ரூபாய் நோட்டுகள், பாஸ்போர்ட் மற்றும் இந்தியா என்று அச்சிட்டுள்ள அனைத்தையும் மாற்றும்போது அதிக செலவுகளுடன், பெரிய அசவுகரியம் ஏற்படும்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியம் இல்லை
ஆனால் மத்திய அரசின் மனநிலையை யாராலும் கணிக்க முடியாது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இடமே கிடையாது. அதனை நடத்தவும் முடியாது, சாத்தியமும் இல்லை.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எந்த மதத்திற்கோ, மதநம்பிக்கை உடையவர்களுக்கோ, வழிபாடு செய்பவர்களுக்கோ எதிராக பேசவில்லை. எங்களது கட்சி(காங்கிரஸ்) நிலைப்பாடும் எம்மதமும் சம்மதம் தான். அதற்கு மேலே மதச்சார்பின்மை கொள்கையை நம்புகிறோம்.
தலைக்கு விலை பேசியவரை கைது செய்ய வேண்டும்
ஒரு கருத்தை சொல்லியதற்காகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நாட்டை விட்டுச்செல்ல வேண்டும் என்று சொன்னால் என்றால் அதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதுமட்டுமில்லாமல், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு விலை பேசியவர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
எனவே தமிழக முதல்-அமைச்சர் சிறப்புப்படை அமைத்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசியவர் மீது வழக்கு தொடர்ந்து அவரை கைது செய்து தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும்.
ஏற்றுக்கொள்ள முடியாது
ஒரு மாநிலத்தின் அமைச்சராக, எம்.எல்.ஏ.வாக இருப்பவரின் தலையை வெட்டிக்கொண்டு வா. ரூ.10 கோடி தருகிறேன் என்று சொல்லியுள்ளார். அதை இந்த நாடு, இங்குள்ள அரசியல் சாசனம், கோர்ட்டு, காவல் துறை அனைத்தும் பார்த்துக்கொண்டு இருக்கிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
39 தொகுதிகளிலும் வெற்றி
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தெளிவாக பேச வேண்டும். சனாதனம் என்றால், சாதி அடிப்படையிலேயே சமுதாயத்தை பிரித்து பார்க்கும் கொள்கையை அவர் ஏற்றுக்கொள்கிறாரா? இல்லையா? என்பதை விளக்க வேண்டும்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும். சீமானுக்கு என்று நிலையான கொள்கை கிடையாது. வாக்கு வங்கி கிடையாது. காவிரி பிரச்சினையில் அந்தந்த மாநில கட்சிகள், அங்குள்ள மக்களின் நிலைப்பாட்டைத்தான் எடுப்பார்கள். எனவே இதற்கு பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநகர் மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், மண்டல தலைவர் சிதம்பரம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.