மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் ஆய்வு


மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர்  ஆய்வு
x
தினத்தந்தி 4 Aug 2023 12:15 AM IST (Updated: 4 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்திற்கு மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்திற்கு மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

கலந்துரையாடல் நிகழ்ச்சி

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மீன்வளம் மீனவர் நலத்துறை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில், மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில் மீனவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர் பேசியதாவது:- மீன்பிடிப்பை பிரதான தொழிலாக நம்பி உள்ள மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மீனவர்களின் நலன்களை பாதுகாத்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்திற்கு 18-ந்தேதி வருகை தந்து மீனவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு மீனவர்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிகிறார்.

மீனவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களையும் வழங்க உள்ளார். அதற்கு முன்னேற்பாடாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் முக்கிய தேவைகளை கேட்டறியப்பட்டது. அப்போது 20 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

மீனவர்கள் கோரிக்கைகள்

குறிப்பாக மீன்பிடி இறங்கு தளத்தில் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல், டீசல் மானியம் உயர்த்தி தர வேண்டுதல், மீன்பிடி தடைக்காலம் நாட்களை குறைக்க வேண்டுதல், இலங்கை அரசால் பிடிக்கப்படும் படகுகளையும் மீனவர்களுடன் சேர்த்து விடுதலை செய்ய வேண்டுதல், மீனவர்களுக்கான ஓய்வூதியம் வயது வரம்பை உயர்த்துதல், அரசு நலத்திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பதிவு முறை இணையதளத்தில் ஏற்படும் தவறுகளை உடனுக்குடன் சரி செய்திட வேண்டுதல், நீண்ட நாளாக மீனவர்கள் குடியிருக்கும் பகுதியில் மீனவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுதல் போன்ற கோரிக்கைகள் முன்வைத்ததில் இணையதளத்தில் பதிவேற்ற முறையில் ஏற்பட்டுள்ள தவறுகளை சிறப்பு முகாம் அமைத்து ஒருவார காலத்திற்குள் சரி செய்து அரசு நிவாரணத்தொகை பெறாதவர்களுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மீன் இறங்கு தளம் மற்றும் மீனவர் குடியிருப்பு பகுதிகளில் மீன்வளம்-மீனவர் நலத்துறையின் மூலம் உயர்மட்ட மின் விளக்குகள் அமைத்து தரப்படும். சாலை வசதிகள், குடிநீர் குழாய் இணைப்புகள் மாவட்ட நிர்வாகம் மூலம் செய்து கொடுக்கப்படும். மேலும் மீனவர்களுக்கான முக்கிய கோரிக்கைகள் மற்றும் முக்கிய திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் வழங்க உள்ளார். எனவே 18-ந்தேதி நடைபெறுகின்ற மீனவர்கள் மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.

அமைச்சர் ஆய்வு

தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் புதிய மீன்பிடி இறங்குதளம் அமைப்பதற்கும், குந்துகால், நாலுபனை, பாம்பன் பகுதியில் மீன்பிடி இறங்குதளத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், மீன்பிடி துறைமுகம் தலைமை பொறியாளர் ராஜூ, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு காந்தி, பயிற்சி சப்-கலெக்டர் சிவானந்தம், மீன்வளத்துறை துணை இயக்குனர்கள் பிரபாவதி, காத்தவராயன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி, மீனவர் அணி துணை அமைப்பாளர் தொண்டி சீனிராஜன், தங்கச்சிமடம் ஜோசப் எஸ்தர் மற்றும் அரசு அலுவலர்கள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story