தஞ்சையில் நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, சிவசங்கர் ஆய்வு
தஞ்சையில் நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, சிவசங்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தஞ்சையில் நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, சிவசங்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
முதல்-அமைச்சர் வருகை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சையில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக நாளை (வியாழக்கிழமை) மதியம் திருச்சியில் இருந்து வருகிறார். மாலை 5 மணிக்கு தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள ஆம்னி பஸ் நிலையம், தஞ்சை மாநாட்டு மையம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிவுற்ற பணிகளையும் திறந்து வைக்கிறார்.
பின்னர் மகாராஜா மகாலில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு திருச்சி சென்று அங்கிருந்து சென்னை செல்கிறார்.
ரூ.10¾ கோடி
தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடியே 46 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஆம்னி பஸ் நிலையம், ரூ.15 கோடியே 69 லட்சம் செலவில் சூரிய ஒளி மின் நிலையம் அமைத்தல், அருளானந்தநகர் பகுதியில் ரூ.11 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித பூங்கா, ரூ.15 கோடியே 61 லட்சம் மதிப்பீட்டில் காந்திஜி வளாகம் மேம்படுத்தும் பணி, ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் கருணாசாமி கோவில்குளம் மேம்படுத்தும் பணி, ரூ.1 கோடியே 44 லட்சம் செலவில் அழகிகுளம் மேம்படுத்தும் பணி, ரூ.2 கோடியே 95 லட்சம் செலவில் பெத்தண்ணன் கலையரங்கம் சீரமைப்பு ஆகிய பணிகளை தொடங்கி வைக்கிறார்.
அமைச்சர்கள் ஆய்வு
மேலும் ராஜாகோரி மயானத்தில் எரிவாயு தகன மையம் ரூ.4 கோடியே 39 லட்சம் செலவிலும், மாநகராட்சி பள்ளிகளை சீர்மிகு பள்ளிகளாக ரூ.7 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுதல், நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் ரூ.2 கோடியே 61 லட்சம் செலவில் அமைக்கும் பணியையும் தொடங்கி வைக்கிறார்.
இந்த பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய பஸ் நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள ஆம்னி பஸ் நிலையம் மற்றும் மாநாட்டு மையத்தில் இருந்து தொடங்கி வைக்கிறார். இதற்கான பணிகள் நடைபெற்று வருவதை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது கலெக்டர் தீபக்ஜேக்கப், திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன், டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார், செயற்பொறியாளர் சீனிவாசன், மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி, உதவி பொறியாளர் கார்த்திகேயன், கோட்டாட்சியர் பழனிவேல், தாசில்தார் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.