நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு


நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு
x

நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் கிடைக்கும் வகையில் நெம்மேலியில் நடைபெற்று வரும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ. அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

திருவள்ளூர்

ஆய்வு

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி பகுதியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

குடிநீர் தேவை

இந்த ஆய்வின்போது அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னைக்கு அருகே வற்றாத நீராதாரங்கள் இல்லாத காரணத்தினால் சென்னை பெருநகரம் வடகிழக்கு பருவமழையை பெரிதும் சார்ந்திருக்கிறது.

வடகிழக்கு பருவமழை பொய்க்கும் காலங்களில் நகரின் நீண்ட கால குடிநீர் தேவை மற்றும் மக்களின் அன்றாட குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை அமைத்துள்ளது.

கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள், சென்னை மாநகரின் குடிநீர் தேவைகளை நிறைவு செய்வதில் பெரும் பங்காற்றி வருகின்றன.

ஜூலை மாதத்துக்குள்...

தமிழ்நாட்டில் மீஞ்சூரில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் முதல் நிலையம் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் 2010-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் 23.2.2010 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு 2013-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

தற்போது நெம்மேலியில் ரூ.1,516 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்காக நடைபெற்று வரும் பணிகளை வருகிற ஜூலை மாதத்துக்குள் முழுமையாக முடித்திட அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

9 லட்சம் மக்கள் பயன்

பின்னர் அவர்கள், கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திலிருந்து பல்லாவரம் வரை 49 கி.மீ நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், 'இந்த நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்படும் குடிநீர், உள்ளகரம்-புழுதிவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்க்கட்டளை, மூவரசன்பேட்டை, பல்லாவரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப வழித்தடப் பகுதியில் உள்ள சுமார் 9 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ் குமார், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஏ.ஆர்.ராகுல்நாத், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல் இயக்குனர் ராஜ கோபால் சுன்கரா, என்ஜினீயர் இயக்குனர் சமிலால் ஜான்சன், முதன்மைப் என்ஜினீயர் மலைச்சாமி உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story