சென்னையில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்படும் வெள்ள தடுப்பு பணிகளை அமைச்சர்கள் ஆய்வு


சென்னையில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்படும் வெள்ள தடுப்பு பணிகளை அமைச்சர்கள் ஆய்வு
x

சென்னையில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

சென்னை,

சென்னையில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் குறித்து தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

இதன்பின்பு அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

கொளத்தூர் தொகுதியில் உள்ள வீனஸ் நகர், கணேஷ் நகர், ஜெயந்தி நகர் பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற ரூ.96 லட்சம் மதிப்பில் நீர் சேகரிப்பு கிணறு மற்றும் நீர் வெளியேற்றும் நிலையம் அமைக்கும் பணி 30 சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகள் ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் முடிக்கப்படும். டெம்பிள் பள்ளி அருகில், மழைநீர் சேகரிப்பு கிணறு மற்றும் நீர் வெளியேற்று நிலையம் அமைக்கும் பணி அக்டோபர் 31-ந் தேதிக்குள் நிறைவுபெறும்.

மழைநீர் வடிகால்

கொளத்தூர் பகுதிகளில் தேங்கும் மழைநீர் தணிகாச்சலம் கால்வாய் வழியாக கொடுங்கையூர் கால்வாயினை சென்றடையும் வகையில் பெரிய மழைநீர் வடிகால் 250 மீட்டர் நீளத்திற்கு அமைக்கும் பணி ரூ.5 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணியும் அக்டோபர் 31-ந் தேதிக்குள் முடிவடையும்.

வேனல்ஸ் சாலை சந்திப்பில் தேங்கும் மழை நீர் கூவம் ஆற்றினை சென்றடையும் வகையில், பெரிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும், சிறுபாலம் அமைக்கும் பணியும் ரூ.2.55 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. வருகிற 31-ந் தேதிக்குள் இந்த பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த சாலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் வகையில் 5 சிறு பாலப்பணிகள் அமைக்க திட்டமிட்டு 3 பாலப்பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 2 பாலப்பணிகள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதிக்குள் முடிவடையும்.

மழைக்கு முன்பே முடிக்க ஆய்வு

வால்டாக்ஸ் சாலையில் சென்ட்ரல் ரெயில் நிலையம் முதல் பெத்தநாயக்கன் சாலை வரை 2.3 கிலோ மீட்டர் தூரம் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, 8 சிறுபாலங்கள் அமைக்கும் பணி ரூ.31.28 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.

4,600 மீட்டர் நீளமுள்ள மழைநீர் வடிகால் பணியில், 3,150 மீட்டர் நீளத்திற்கு பணி முடிக்கப்பட்டுள்ளது. 8 பாலங்களில் 3 பாலப்பணிகள் முடிவுற்றுள்ளன. மழைக்காலத்திற்கு முன்பே அனைத்து பணிகளையும் முடிக்கும் வகையில் மின்துறை, ரெயில்வே துறை, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, தலைமை என்ஜினீயர் சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story