"குறு, சிறு தொழில் நிறுவனங்களே நாட்டின் பொருளாதாரத்துக்கு அடித்தளம்'' கருத்தரங்கில், அமைச்சர் பேச்சு


குறு, சிறு தொழில் நிறுவனங்களே நாட்டின் பொருளாதாரத்துக்கு அடித்தளம் கருத்தரங்கில், அமைச்சர் பேச்சு
x

“குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களே நாட்டின் பொருளாதாரத்துக்கு அடித்தளம்'' என்று, சென்னையில் நடந்த கருத்தரங்கில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.

சென்னை,

ஒருங்கிணைந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையின் (அசோசெம்) சார்பில் நடைபெறும் நிலையான கிளஸ்டர் மேம்பாடு - முழுமையான அணுகுமுறை குறித்து விவாதிப்பதற்கான கருத்தரங்கு சென்னையில் நடந்தது. இதில் தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, 'அசோசெம்' தமிழ்நாடு கவுன்சிலின் மாநிலத் தலைவரும், காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ், 'கிராண்ட் தோர்டன் பாரத்' பங்குதாரர் பத்மானந்த், ஜி.டி பாரத் மானேஜர் முகமத் சைதி உள்பட தொழில் முனைவோர்கள், தொழில் அதிபர்கள், அசோசெம் தமிழ்நாடு மாநில கவுன்சில் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:-

பொருளாதார வளர்ச்சிக்கு...

பெரும் தொழிற்சாலைகளே ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி என்ற நிலை மாறி இன்று குறு, சிறு, நடுத்தர தொழில்களே நாட்டின் பொருளாதாரத்திற்கும் தொழில் வளர்ச்சிக்கும் அடித்தளம் என்ற நிலை உருவாகி உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான சமச்சீர் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, கிராமப்புற பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானது.

தமிழ்நாடு, 49 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை கொண்டு தொழில் துறையில் இந்தியாவிலேயே 3-வது மிகப் பெரிய மாநிலமாக விளங்குகிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை பொறுத்தவரையில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 9.22 சதவீதம், ஜவுளியில் 19.4 சதவீதம், கார் ஏற்றுமதியில் 32.5 சதவீதம், தோல் ஏற்றுமதியில் 33 சதவீதம், இந்த சாதனைகளுக்கு எல்லாம் உறுதுணையாகவும் அடித்தளமாகவும் விளங்குவது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

364 தொழில் கூடங்கள்

தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தரத்தினை உலக அளவில் உயர்த்திடும் வகையில் பெருங்குழுமத் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சீபுரம் மாவட்டம் திருமுடிவாக்கத்தில் ரூ.33.33 கோடி அரசு மானியத்துடன் ரூ.47.62 கோடி திட்ட மதிப்பீட்டில், துல்லிய உற்பத்தி பெருங்குழுமமும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ரூ.71.56 கோடி அரசு மானியத்துடன் ரூ.155 கோடி திட்ட மதிப்பீட்டில், மருந்தியல் பெருங்குழுமமும் அமைக்க ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. பணிகள் நடைபெற்று வருகிறது.

குறுந்தொழில் நிறுவனங்களுக்கு புதிய தொழிற்பேட்டை அமைக்க நகர்ப்புறங்களில் போதிய நிலம் இல்லாத காரணத்தினாலும், நிலத்திற்கான முதலீட்டினை குறைக்கவும், உடனடியாக தொழில் தொடங்கவும், புதிய அடுக்குமாடி தொழில் வளாகங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், கிண்டியில் ரூ.90.13 கோடியில் 152 தொழில் கூடங்கள், அம்பத்தூரில் ரூ.60.55 கோடியில் 112 தொழில் கூடங்கள், சேலத்தில் ரூ.24.50 கோடியில் 100 தொழில் கூடங்கள் என மொத்தம் ரூ.175 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 364 தொழில் கூடங்கள் கொண்ட அடுக்குமாடி தொழில் வளாகங்கள் முதல்-அமைச்சரால் விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது.

முன்வர வேண்டும்

உங்களை போன்ற பெரும் கூட்டமைப்புகள் 'அசோசெம்', 'சிக்கி', 'பிக்கி' போன்ற அமைப்புகள் நடத்தும் கருத்தரங்குகள் கூடி ஆலோசித்தோம், கலைந்தோம் என்று இல்லாமல், ஒன்று கூடி செயலாற்றிட வேண்டும். உதாரணமாக குறுங்குழுமங்கள், பெரும் குழுமங்கள் செயல்படுத்தப்படும் போது அமைக்கப்படும் எஸ்.பி.வி-கள், தாங்களின் பங்களிப்பு தொகையினை அளிப்பதற்கு மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், மத்திய - மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்தாலும், எஸ்.பி.வி-க்களின் பங்களிப்புத் தொகை வழங்காத நிலையில், திட்டத்தை தொடங்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, உங்களை போன்ற கூட்டமைப்பினர் புதிய தொழில் முனைவோர்களுக்கும் குழுமமாக செயல்பட முன்வரும் எஸ்.பி.வி.களுக்கு உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கிட முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story