கலெக்டர் அலுவலக கட்டிடப் பணிகளை அமைச்சர்கள் வேலு, காந்தி ஆய்வு
ராணிப்பேட்டை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடப் பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, காந்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
ராணிப்பேட்டை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடப் பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, காந்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
அமைச்சர்கள் ஆய்வு
ராணிப்பேட்டை பாரதி நகரில் ரூ.118.40 கோடி மதிப்பீட்டில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதனை வருகிற 20-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைக்கிறார்.
இதனை முன்னிட்டு கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
கலெக்டர் அலுவலக கட்டிடத்திற்கு எதிரே புல்வெளிகள் அமைக்கப்படுவதையும், நுழைவு வாயில் கட்டப்பட்டு வருவதையும், எஞ்சியுள்ள பணிகள் குறித்தும் கேட்டறிந்து பணிகளை வரும் சனிக்கிழமைக்குள் முடித்திட வேண்டுமென ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்கள்.
விழாப்பந்தல்
தொடர்ந்து கட்டிடத்தில் லிப்ட் அமைக்கப்பட்டு வருவதையும், பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முதல்-அமைச்சர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு, பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டனர்.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை முதன்மை செயற்பொறியாளர் சங்கரலிங்கம், உதவி செயற்பொறியாளர் திரிபுரசுந்தரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.