லாரி மீது மினிவேன் மோதி 4 பேர் பலி


லாரி மீது மினிவேன் மோதி 4 பேர் பலி
x

சாலையில் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மினிவேன் மோதியதில் டிரைவர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

வேலூர்,

வேலூர் காட்பாடி அருகே உள்ள வஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் தீனா (வயது 28). இவரது நண்பர்கள் மதன் குமார் (23), சரவணன் (19), ஜெகன் (26), கோபாலகிருஷ்ணன் (16), சந்தோஷ் (23). இவர்கள் அனைவரும் நேற்று காலை 2 காளை மாடுகளை கிருஷ்ணகிரி அருகே மேல்மலை கிராமத்தில் நடந்த எருது விடும் விழாவில் பங்கேற்க மினிவேனில் ஏற்றிச் சென்றனர்.

மினிவேனை அதே பகுதியை சேர்ந்த நாகராஜன் (23) ஓட்டிச் சென்றார். எருது விடும் விழாவில் பங்கேற்றுவிட்டு 2 காளைகளை அதே வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த டோல்கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் வந்தபோது அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மினிவேன் பயங்கரமாக மோதியது.

டிரைவர் உள்பட 4 பேர் பலி

இதில் மினிவேனின் முன்பகுதி நொறுங்கியது. டிரைவர் நாகராஜன் மற்றும் முன் பக்கம் அமர்ந்திருந்த தீனா, மதன் குமார் ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மினி வேனில் பயணம் செய்த மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு கோபாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி இறந்தார். 2 காளைகள் லேசான காயத்துடன் உயிர் தப்பியது.


Next Story