மின்நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
காவுத்தாம்பாளையத்தில் மின் நிலையம் அமைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று விவசாயிகள் கூறினர். எனவே மின்நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
மின் நிலையம்
தமிழ்நாடு மின்தொடர் அமைப்பு கழகத்தின் சார்பில் மின் நிலையம் கவுத்தாம்பாளையத்தில் அமைய உள்ளது. இந்த திட்டத்தால் விவசாயிகளின் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதுடன் ஆடு, மாடு, கோழி போன்ற உயிரினங்களை மின்சார ஒயர்களினால் அதிக அதிர்வலைகளால் பாதிப்பு ஏற்படும். மேலும் மனிதர்களுக்கு புற்று நோய் வருவதாகவும், மின்கம்பி செல்லும் பாதையில் வீடுகட்டி குடி இருக்க முடியாத நிலை ஏற்படும். விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கும், ஆழ்துளை கிணறு மற்றும் கிணறு வெட்டுவதில் சிரமம் ஏற்படும். எனவே கவுத்தாம்பாளையத்தை சுற்றியுள்ள செங்காளி பாளையம், பூவுனம்பட்டி, எருமக்காரபாளையம், குமரிக்கல்பாளையம் உள்ளிட்ட 20 கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தாராபுரம், இச்சிப்பட்டி, புகலூர் பவர் கிரேட் பகுதிக்கு காவுத்தாம்பாளையம் பாளையத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பெண்கள் வந்தனர். அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பற்றியும், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அப்போது மின் நிலையத்தால் பாதிப்பு என்பதை நேரடியாக உணர்ந்த விவசாயிகள் தாங்கள் தொடர்ந்து போராடி வருவதாகவும் அதையும் மீறி தமிழக அரசு பவர் ஸ்டேஷன் அமைத்தால் கிராம மக்கள் அனைவரும் உயிரை விட்டு விடுவதாக கண்ணீருடன் தெரிவித்தனர்.
கோரிக்கை
மேலும் அத்திக்கிடவு- அவினாசி திட்டத்திற்காக செங்காளி பாளையம், பூவுனம்பட்டி, எருமக்காரபாளையம், குமரிக்கல்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்குதண்ணீர் கொண்டு வர பொதுப்பணித்துறை அதிகாரிகள் சோதனை ஓட்டம் நடத்தி வருகின்றனர்.
மின் நிலையம் அமைத்தால் விவசாய விளை நிலங்களில் உள்ள தென்னை மரங்கள் வெட்டும் சூழ்நிலை ஏற்படும், இதனால் வருவாய் பாதிக்கும என்றும், கீழடியில் உள்ளது போல தங்களது ஊரில் பிரம்மாண்ட நடு கல் உள்ளதாகவும் அதனால் கிராமத்தில் மின் நிலையம் அமைப்பதை விட்டுவிட்டு அகழ்வாராய்ச்சியை தமிழக அரசு நடத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.