கடன் உதவி பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்


கடன் உதவி பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்
x

கடன் உதவி பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் ஏற்கனவே தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்கடன் மற்றும் கல்விக்கடன் ஆகியவை குறைந்த வட்டி வீதத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் முகவராக செயல்படும், தேசிய சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் கைவினை கலைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் "விராசாட்-2" என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தில் பயன்பெற கீழ்க்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சிறுபான்மையினராக (இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின்) இருக்க வேண்டும். 18 முதல் 60 வயது உடையவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். விராசட் 1-ல் பயன்பெறாத நபராகவும், ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமலும் கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் ஆண்களுக்கு 6 சதவீதம் வட்டி வீதத்திலும், பெண்களுக்கு 5 சதவீதம் வட்டி வீதத்திலும் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.

விண்ணப்பதாரார் கோரும் கடன் தொகையில் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகத்தின் மூலம் 90 சதவீதம் கடன் தொகையும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 5 சதவீதம் கடன் தொகையும் மற்றும் விண்ணப்பதாரரின் பங்குத்தொகை 5 சதவீதம் சேர்த்து கடன் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடனை திரும்ப செலுத்தும் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும். இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், அரியலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story