ஈரோட்டில் கொள்ளையடிப்பதற்காக வீட்டின் கதவுக்கு தீவைத்த மர்மநபர்கள்- உடைக்க முடியாததால் தப்பி ஓட்டம்
ஈரோட்டில் கொள்ளையடிப்பதற்காக வீட்டின் கதவுக்கு தீ வைத்து உடைக்க முயன்ற மர்மநபர்கள், கதவை உடைக்க முடியாததால் தீயை அணைத்துவிட்டு தப்பி ஓடினர்.
ஈரோட்டில் கொள்ளையடிப்பதற்காக வீட்டின் கதவுக்கு தீ வைத்து உடைக்க முயன்ற மர்மநபர்கள், கதவை உடைக்க முடியாததால் தீயை அணைத்துவிட்டு தப்பி ஓடினர்.
மருந்து விற்பனை பிரதிநிதி
ஈரோடு கீழ்திண்டல் டி.ஆர்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (வயது 58). மருந்து விற்பனை பிரதிநிதி. இவருடைய மனைவி, கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் அவர்களுக்கு கோவையிலும் வீடு உள்ளது. ஸ்டீபன் ராஜ் தனது குடும்பத்துடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஈரோட்டுக்கு வந்துவிட்டு சென்றார்.
இந்தநிலையில் ஸ்டீபன்ராஜ் நேற்று காலை ஈரோட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் கதவில் சாவி போடும் பகுதியில் தீ பிடித்து கருகிய நிலையில் இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
தீ வைப்பு
விசாரணையில், வீட்டில் யாரும் இல்லாதபோது மர்மநபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்காக கதவை உடைக்க தீ வைத்தது தெரியவந்தது. ஆனால் கதவை உடைக்க முடியாமல் திணறியதால் அவர்கள் கொள்ளையடிக்கும் திட்டத்தை கைவிட்டனர். மேலும், அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.
வீட்டில் இருந்த பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை என்று வீட்டின் உரிமையாளர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். எனினும் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோட்டில் வீட்டில் கொள்ளை அடிப்பதற்கு கதவை தீ வைத்து உடைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.