பெண் பயணி தவறவிட்ட 2½ பவுன் சங்கிலி மீட்பு
அரசு டவுன் பஸ்சில் பெண் பயணி தவறவிட்ட 2½ பவுன் சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அன்னவாசல் அருகே மாங்குடியை சோ்ந்தவர் கலைச்செல்வி. இவர் குழிபிறையில் இருந்து புதுக்கோட்டைக்கு அரசு டவுன் பஸ்சில் நேற்று காலை பயணம் செய்தார். அப்போது பஸ்சில் அவர் தனது கைப்பையை தவறவிட்டார். அதில் 2½ பவுன் சங்கிலி மற்றும் ரூ.1,000 இருந்துள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் வந்த பின் தனது கைப்பையை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கலைச்செல்வி தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட பஸ் கண்டக்டர் ரெங்கராஜிடம் தகவல் தெரிவித்து பஸ்சில் தேடிப்பார்க்கப்பட்டது. அப்போது பெண் பயணி தொிவித்த கைப்பையை மீட்டனர். இதனையடுத்து புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் போலீசார் மூலம் பயணி கலைச்செல்வியிடம் சங்கிலி மற்றும் பணம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது புதுக்கோட்டை நகர போக்குவரத்து கழக கிளை மேலாளர் பழனிவேலு, நேர காப்பாளர் நாகலிங்கம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.