தண்ணீர் தொட்டியில் கழிவு கலப்பு: விசாரணையின் தற்போதைய நிலையை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்-சி.பி.சி.ஐ.டி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


தண்ணீர் தொட்டியில் கழிவு கலப்பு: விசாரணையின் தற்போதைய நிலையை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்-சி.பி.சி.ஐ.டி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

தண்ணீர் தொட்டியில் கழிவு கலந்த சம்பவத்தில் விசாரணையின் தற்போதைய நிலையை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை

தண்ணீர் தொட்டியில் கழிவு கலந்த சம்பவத்தில் விசாரணையின் தற்போதைய நிலையை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

குழந்தைகளுக்கு பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

புதுக்கோட்டை வேங்கைவயல், இறையூர் பஞ்சாயத்தில் 100-க்கும் மேற்பட்ட அருந்ததியர் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கழிவு கலந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தண்ணீரை குடித்ததால் பல குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதுசம்பந்தமான புகாரின்பேரில் இப்பகுதியில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது இந்த பகுதியில் இரட்டைக்குவளை முறையும் வழக்கத்தில் இருந்தது தெரியவந்தது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் குறித்து புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் குழு அமைத்து விசாரணை நடைபெற்றது. பின்னர் இந்த விசாரணை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆனால் இதுவரை இந்த வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. எனவே இந்த விவகாரம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

எந்த முன்னேற்றமும் இருக்காது

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவ வழக்கு, சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. விசாரணையில் ஈடுபடும் அதிகாரிகள் ஓய்வு பெற்று சென்று விடுகின்றனர்.

அதுபோல தண்ணீரில் கழிவு கலந்த விவகாரத்தை வேறு எந்த விசாரணை அமைப்புக்கு மாற்றினாலும் எந்த முன்னேற்றமும் இருக்கப்போவதில்லை. மக்களும் இந்த சம்பவங்களை காலப்போக்கில் மறந்து விடுவார்கள். கல்வியால் ஏற்படும் விழிப்புணர்வால்தான் இது போன்ற சம்பவங்களை தடுக்க இயலும், என்றனர்.

அறிக்கை அளிக்க உத்தரவு

மேலும் நீதிபதிகள் கூறுகையில், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றினால், நம் மாநில காவல்துறையில் போதுமான ஆட்கள் இல்லையோ என்ற கேள்வி மக்களிடம் எழும். ஆனால் தமிழ்நாடு காவல்துறையிடம் தேவையான மனித வளம் உள்ளது.

எனவே இந்த வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story