மதுரை கோர்ட்டில் இருந்து மு.க.அழகிரி மனுவை சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்: நீதிபதி உத்தரவு


மதுரை கோர்ட்டில் இருந்து மு.க.அழகிரி மனுவை சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்: நீதிபதி உத்தரவு
x

மதுரை கோர்ட்டில் இருந்து மு.க.அழகிரி மனுவை சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் நீதிபதி உத்தரவு.

சென்னை,

முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா என்ஜினீயரிங் கல்லூரி மதுரை மாவட்டம், சிவரக்கோட்டையில் உள்ளது. இந்த கல்லூரிக்காக அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை அபகரித்து விட்டதாக கடந்த 2014-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை மதுரை சிறப்பு கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி மு.க.அழகிரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சிறப்பு கோர்ட்டு, மு.க.அழகிரி மீது போலீசார் சுமத்தியுள்ள மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கவில்லை. ஆனால், சொத்து குவிப்பு குற்றச்சாட்டு முகாந்திரம் உள்ளது என்று உத்தரவிடப்பட்டது.

மோசடி குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்ற உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், போலீசார் மேல்முறையீடு செய்தனர். சொத்துகுவிப்புக்கு முகாந்திரம் உள்ளது என்ற உத்தரவை எதிர்த்து மதுரை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் அழகிரி மனு தாக்கல் செய்தார்.

இந்தநிலையில் போலீசார் தாக்கல் செய்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.அழகிரி சார்பில் மூத்த வக்கீல் ஆர்.ஸ்ரீனிவாஸ் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து மதுரை கோர்ட்டில் உள்ள அழகிரி மனுவை, சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்ற வேண்டும். அந்த மனுவை, போலீசார் தாக்கல் செய்துள்ள மனுவுடன் விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்தார்.


Next Story