சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறோம்: தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் பக்க பலமாக இருக்க வேண்டும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருவதால் தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் பக்க பலமாக இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருவதால் தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் பக்க பலமாக இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மழை
ஈரோட்டில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் வருவதற்கு முன்னதாக திருமண மண்டபம் மற்றும் ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், ஈரோட்டை பொறுத்தவரை மழை போக்குக்காட்டி வந்தது. இந்தநிலையில் நேற்று காலையில் இருந்தே மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் வானம் வெளிச்சமாக இருந்தது.
ஆனால், மாலையில் திடீரென்று கருமேகங்கள் சூழ்ந்து மழைத்துளிகள் விழத்தொடங்கின. மழை பெய்யத்தொடங்கியதும், விழாவில் பங்கேற்ற பலரும், ஈரோட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும்போதெல்லாம் மழை பெய்கிறது என்று பேசிக்கொண்டனர்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்-சு.முத்துசாமி
பின்னர் அவர் வந்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசும்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தால் மழை வருகிறது என்று சுட்டிக்காட்டி பேசியதுடன், நான் முதலில் சுயமரியாதைக்காரன், பகுத்தறிவாளன். இதன் பிறகுதான் அரசியல்வாதி. அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சுயமரியாதையிலும், பகுத்தறிவிலும் ஒரே கருத்தை கொண்டவன் என்று பேசினார்.
இதுபோல் அமைச்சர் சு.முத்துசாமி பேசும்போது, கடந்த ஆகஸ்டு மாதம் முதல்-அமைச்சர் ஈரோடு வந்தபோது கள்ளிப்பட்டியில் இருந்து ஈரோடு வரை மழை கொட்டியதை நினைவூட்டி பேசினார்.
கருணாநிதியின் வார்த்தைகள்
பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-
நான் ஈரோடு வருகிற போது மழை பெய்வதாக இங்கே சுட்டிக்காட்டினீர்கள். ஆனால், நாம் ஆட்சிக்கு வந்தபோது மிகப்பெரிய சோதனைகாலத்தில் இருந்தோம். கொடிய கொரோனா பாதிப்பு இருந்தது. அதில் இருந்து மீண்டதுமே, தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மழை பெய்தது. விடாமல் மழை எங்கும் பெய்து கொண்டுதான் இருக்கிறது.
இப்போது மட்டுமல்ல, நான் சென்னை மேயராக மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு மேயராக பதவி ஏற்ற நாளில் இருந்து சென்னையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. மழை நிவாரணப்பணிகளை பார்வையிட, அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியை அழைத்துச்சென்றோம். அப்போது அவர், "ஸ்டாலின் மேயரா வந்ததும் விடாமல் மழை பெய்கிறதே" என்று கூறினார். அந்த வார்த்தைகள் இன்றுமுதல் என் காதுகளில் ஒலிக்கிறது.
பக்கபலமாக..
இப்போது நாம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதில் இருந்து மழை பெய்கிறது. தண்ணீர் பஞ்சம் இல்லை. விவசாயிகளுக்கு பாசனத்துக்கு தேவையான தண்ணீரும், எல்லா மக்களுக்கும் குடிக்கும் நீரும் தாராளமாக கிடைக்கிறது. மக்கள் சுபிட்சமாக இருக்கிறார்கள்.
இது நம்முடைய ராசி. நம்முடைய என்றால் என்னை மட்டுமல்ல, என்னை தாங்கிப்பிடிக்கும் மக்களாகிய நீங்களும் சேர்ந்த ராசி. தேர்தல் நேரத்தில் கொடுத்த உறுதி மொழி, வாக்குறுதிகள் மட்டுமின்றி சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறோம். இந்த ஆட்சிக்கு தமிழக மக்கள் தொடர்ந்து பக்க பலமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.