வீடு, வீடாக சென்று குறைகளை கேட்டறிந்த க.செல்வராஜ் எம்.எல்.ஏ.
திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. திருப்பூர் மாநகராட்சி 52-வது வார்டு பகுதியில் 'இல்லம் தேடி எம்.எல்.ஏ.' என்ற திட்டத்தின் கீழ் வெள்ளியங்காடு பகுதியில் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். தினமும் குடிநீர் வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக எம்.எல்.ஏ. கூறினார். சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும். குப்பைகளை அகற்றிக்கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தங்கள் பகுதி பிரச்சினைகளை தெரிவித்தார்கள். அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றிக்கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. உத்தரவிட்டார். பல பகுதிகளில் பெண்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். கழிவுநீர் வடிகால் வசதியில்லாத பகுதிகளில் விரைவில் பணிகளை மேற்கொள்ளவும், குப்பை குவியாமல் தினமும் அள்ளுவதற்கு அதிகாரிகளிடம் எடுத்துக்கூறினார். அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்று கட்டிட பராமரிப்பு, தேவைப்படும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். ரேஷன் கடையில் பொருட்கள் வினியோகம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் மாநகராட்சி உதவி ஆணையாளர் வினோத், செயற்பொறியாளர் செல்வநாயகம், தி.மு.க. திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், பகுதி செயலாளர் அய்யப்பன், வார்டு செயலாளர் நந்தகோபால், மாவட்ட நிர்வாகி திலகராஜ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.