விபத்தில் சிக்கியவர்களை தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.
பாளையங்கோட்டை அருகே விபத்தில் சிக்கியவர்களை தனது காரில் மருத்துவமனைக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அழைத்து சென்றார்.
இட்டமொழி:
பாளையங்கோட்டை அருகே உள்ள கீழமுன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் பாலையா (வயது 75). இவர் தனது பேரன் கண்ணன் (வயது 8) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கருங்குளம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது விபத்து ஏற்பட்டு 2 பேரும் படுகாயமடைந்தனர்.
அப்போது அந்த சாலையில் வந்த ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உடனடியாக காரில் இருந்து இறங்கி காயமடைந்தவர்களை பார்த்து ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அவர் காயமடைந்தவர்களை விரைந்து மருத்துவமனைக்கு அனுப்ப உதவியாக தனது காரிலேயே அவர்களை ஏற்றிக்கொண்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் காயமடைந்தவர்களை தனது சொந்த காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள்.