செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களில் நடமாடும் காய்கனி அங்காடி: முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்


செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களில் நடமாடும் காய்கனி அங்காடி: முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்
x

வீட்டுக்கு சென்று பண்ணை காய்கறிகளை விற்பனை செய்யும் நடமாடும் காய்கனி அங்காடிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

சென்னை,

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைகள் சார்பில் ரூ.15.40 கோடி செலவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

2022-23-ம் ஆண்டிற்காக 3,204 கிராம பஞ்சாயத்துகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை ரூ.300 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்திட ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஒரு கிராம பஞ்சாயத்தில் 300 குடும்பங்களுக்கு ரூ.11.49 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு குடும்பத்திற்கு 2 தென்னங்கன்றுகள் வீதம் 19.16 லட்சம் தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வினியோகம் செய்யப்படவுள்ளது.

இத்திட்டத்தை தொடங்கிவைக்கும் விதமாக காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 2 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.

நடமாடும் காய்கனி அங்காடி

தமிழ்நாட்டில் இயங்கி வரும் 2 பொதுத்துறை, 15 கூட்டுறவு மற்றும் 15 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 2021-22-ம் ஆண்டு அரவைப்பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, தமிழக அரசின் சிறப்பு ஊக்கத்தொகையான ரூ.195-யையும் சேர்த்து, டன் ஒன்றுக்கு ரூ.2,950 தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்கப்படும்.

அந்த வகையில் 1.21 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு ஊக்கத்தொகைக்கான ஆணைகளை வழங்கும் அடையாளமாக முதல்-அமைச்சர், 2 கரும்பு விவசாயிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில் சார்பில் கோவை, திருச்சி, செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் நுகர்வோரின் இல்லத்திற்கே சென்று பண்ணை காய்கறிகளை விற்பனை செய்யும் வகையில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை முதல்-அமைச்சர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

அடுக்குமாடி குடியிருப்புகள்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.405.90 கோடி செலவில் 8 மாவட்டங்களில் 15 திட்டப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 4,644 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

அதனைத்தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 4,500 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும், தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 11,300 பயனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.237.30 கோடி மதிப்புள்ள பணி ஆணைகளை வழங்கினார். மேலும் 350 பயனாளிகளுக்கு குடியிருப்பு மற்றும் மனைகளுக்கான கிரயப்பத்திரங்களையும் வழங்கிடும் அடையாளமாக 8 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.

நகரமைப்பு அலுவலர்கள்

தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கீழ் இயங்கும் நகரமைப்பு இயக்ககத்தில் காலியாக உள்ள 27 உதவி இயக்குனர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, இந்த பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவில், 27 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 பேருக்கு உதவி இயக்குனர் பணிக்கான நியமன ஆணையை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் இறையன்பு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச்செயலாளர் அபூர்வா, நகரமைப்பு இயக்குநர் பா.கணேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story