அதி தீவிர புயலாக நாளை கரையை கடக்கிறது "மோக்கா"..!வானிலை மையம் தகவல்


அதி தீவிர புயலாக நாளை கரையை கடக்கிறது மோக்கா..!வானிலை மையம் தகவல்
x

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

மோக்கா புயல் வடக்கு திசையில் நகர்ந்து நேற்று மிகத் தீவிர புயலாக மாறி மத்திய மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்தது. அதாவது போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 530 கி.மீ. மேற்கு-வடமேற்கே நிலை கொண்டுள்ளது.

இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெற்று நாளை (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை நோக்கி 150 கி.மீ. முதல் 175 கி.மீ. வேகத்தில் கடக்கக்கூடும்.

இதன் காரணமாக ஏற்படும் வெப்ப சலனத்தால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (சனிக்கிழமை) முதல் மே 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 4 நாட்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story