'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்த பள்ளி மாணவர்களுக்கு மாதிரி தேர்வு; 90 பேர் எழுதினர்


நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த பள்ளி மாணவர்களுக்கு மாதிரி தேர்வு; 90 பேர் எழுதினர்
x

பெரம்பலூர் மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்த 90 மாணவ-மாணவிகளுக்கு மாதிரி தேர்வு நேற்று நடைபெற்றது.

பெரம்பலூர்

'நீட்' தேர்வுக்கு விண்ணப்பம்

வரும் கல்வியாண்டிற்கான 'நீட்' தேர்வு அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளும் 'நீட்' தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவ-மாணவிகள் பயிற்சி மையங்களில் சேர்ந்து 'நீட்' தேர்வுக்கான பயிற்சி பெற்று வருகின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளுக்கு 'நீட்' தேர்வு எழுத அந்தந்த மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஏற்பாட்டில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 முடித்தவர்களில், 284 மாணவ-மாணவிகள் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 154 பேருக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு கடந்த மாதம் 5-ந்தேதி முதல் வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இவர்களுக்கு பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு முதுகலை ஆசிரியர்கள் கற்பித்து வந்தனர்.

மாதிரி தேர்வு

இந்த நிலையில் வருகிற 17-ந்தேதி 'நீட்' தேர்வு நடைபெறுவதால், நேற்று அந்த மாணவ-மாணவிகளுக்கு 'நீட்' மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. இதில் 12 மாணவர்களும், 78 மாணவிகள் என மொத்தம் 90 தேர்வில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு 'நீட்' தேர்வில் வழங்கப்படும் ஓ.எம்.ஆர். விடைத்தாள், ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு 180 கேள்விகள் அடங்கிய கேள்வித்தாள் வழங்கப்பட்டன.

கேள்வித்தாளை வாங்கிய மாணவ-மாணவிகள் ஓ.எம்.ஆர். விடைத்தாளில் பதிலை குறிக்க ஆரம்பித்தனர். காலையில் 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணி வரை நடந்தது. மதியத்துக்கு பிறகு விடைத்தாள் ஆசிரியர்களால் திருத்தி மாணவ-மாணவிகளுக்கு கொடுக்கப்பட்டன.

7.5 சதவீத இட ஒதுக்கீடு

'நீட்' மாதிரி தேர்வினை எழுதியதால், வருகிற 17-ந்தேதி மத்திய அரசால் நடத்தப்படவுள்ள 'நீட்' தேர்வை பயமில்லாமல் எழுதலாம் என்று மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். கடந்த கல்வி ஆண்டில் தமிழகத்தில் அரசு பள்ளியில் பயின்று 'நீட்' பயிற்சி பெற்ற 544 பேருக்கு அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு பயில வாய்ப்பு கிடைத்தது.

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 5 பேருக்கு எம்.எம்.பி.எஸ். படிப்பு பயிலவும், ஒருவருக்கு பல் மருத்துவம் படிக்கவும் இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story