வாரணவாசி ஊராட்சிக்கு முன் மாதிரி கிராம விருது


வாரணவாசி ஊராட்சிக்கு முன் மாதிரி கிராம விருது
x

சுகாதாரத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக வாரணவாசி ஊராட்சிக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கப்பட்டது.

அரியலூர்

முன் மாதிரி கிராம விருது

அரியலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ேநற்று முன்தினம் நடைபெற்ற குடியரசு தின விழாவில் 2021-22-ம் ஆண்டில் சுகாதாரத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக திருமானூர் ஊராட்சி ஒன்றியம், வாரணவாசி கிராம ஊராட்சிக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கப்பட்டது. இதனை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரனுக்கு மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வழங்கினார். இதுகுறித்து ராஜேந்திரன் கூறியதாவது:-

இந்த விருதின் அடிப்படை நோக்கம் ஊராட்சியில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஊராட்சியில் உள்ள உரக்கிடங்கிற்கு எடுத்துச் சென்று அங்கு தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரக்குழியில் சேகரித்து அதன் மூலம் இயற்கை உரம் தயாரித்து விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு வழங்குவதாகும்.

தனிநபர் கழிப்பறைகள்

வாரணவாசி ஊராட்சி திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக செயல்படுகிறது. இங்குள்ள 650-க்கும் மேற்பட்ட வீடுகளில் தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டு நல்ல நிலைமையில் செயல்பட்டு வருகிறது. மேலும் கழிப்பறை கட்ட போதிய இட வசதி இல்லாத குடும்பத்தினருக்கு பொது இடத்தில் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்துகிற வகையில் நல்ல நிலைமையில் செயல்பட்டு வருகிறது.

ஊராட்சியில் உள்ள வடிகாலில் எந்தவிதமான தேக்கமும் இல்லாமல் அனைத்து வடிகாலும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், உபயோகிக்கப்பட்ட தண்ணீர் இறுதி இடத்தில் சமுதாய உறிஞ்சு குழி அமைக்கப்பட்டு சேகரிக்கப்படுகிறது.

நிலத்தடி நீர்மட்டம்

ஊராட்சியில் உள்ள வீடுகளில் 650-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தனிநபர் உறிஞ்சு குழி அமைக்கப்பட்டு வீடுகளில் உபயோகிக்கப்படும் தண்ணீர் வெளியே சென்று வீணாகாமல் அவரவர் வீட்டிலேயே உள்ள உறிஞ்சு குழிகள் மூலம் சேகரிப்பதின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்பாக உள்ளது என்பதால் அந்தத் திட்டத்தையும் இந்த ஊராட்சியில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்.

பொதுமக்கள் பயன்படுத்துகின்ற மினி டேங்க் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் சமுதாய உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு உபயோகிக்கின்ற தண்ணீர் அனைத்தும் பூமிக்கு அடியில் சென்று நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கான வழிவகைகளை 15-க்கும் மேற்பட்ட இடங்களில் செய்திருக்கிறோம்.

தடுப்பணைகள்

வாரணவாசி ஊராட்சியில் 5 இடங்களில் தடுப்பணைகள் கட்டி மழைக்காலங்களில் ஆறுகளில் சென்று வீணாகிற தண்ணீரை தேக்கி நீர்மட்டம் உயர்வதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம் அரியலூர் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் சிறந்த ஊராட்சியாக முன்மாதிரி ஊராட்சியாக வாரணவாசி ஊராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த விருதுடன் ரூ.7½ லட்சம் கிராமத்தினுடைய வளர்ச்சி திட்டங்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய கிராம பொதுமக்களுக்கும், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், ஊராட்சி செயலாளர் சபிதா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ், ராஜா வட்டார வளர்ச்சி துறையின் அலுவலர்கள், கலெக்டர் உள்ளிட்ட அனைவருக்கும் ஊராட்சி மன்றத்தில் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story