தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
நேற்று தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றும் அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும். இது மேலும் அதற்கடுத்த மூன்று தினங்களில் மேற்கு-வட மேற்கு திசையில் தமிழக - புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
18-11-2022 மற்றும் 19-11-2022:- தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
20-11-2022:- தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
21-11-2022:- தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
22-11-2022:- தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்னகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நக்ரின் ஒருசில இடங்களில் லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.