விபத்துகளை தடுக்க நவீன தானியங்கி சிக்னல்கள்


விபத்துகளை தடுக்க நவீன தானியங்கி சிக்னல்கள்
x
தினத்தந்தி 8 May 2023 12:15 AM IST (Updated: 8 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி நகரில் விபத்துகளை தடுக்கும் வகையில் நவீன தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகரில் விபத்துகளை தடுக்கும் வகையில் நவீன தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து நெருக்கடி

பொள்ளாச்சி நகரில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக விடுமுறை நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் அவ்வபோது முக்கிய சாலைகள் சந்திக்கும் பகுதிகளில் விபத்துகள் ஏற்படுகிறது.

இந்த நிலையில் விபத்துகளை தடுப்பது குறித்து சாலை பாதுகாப்பு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் ஏற்கனவே கோவை ரோடு ஆர்ச், பல்லடம் ரோட்டில் 5 ரோடுகள் சந்திப்பு, நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக சிக்னல் நடப்பட்டன. ஆனால் மின் இணைப்பு கொடுக்காததால் அந்த சிக்னல்கள் செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டது.

நவீன தானியங்கி சிக்னல்

அதன்படி தனியார் பங்களிப்புடன் புதிதாக நவீன சிக்னல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:-

பொள்ளாச்சி பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கு முன் சிக்னல் கம்பங்கள் புதிதாக அமைக்கப்பட்டன. ஆனால் மின் இணைப்பு கொடுக்காததால் செயல்படாமல் உள்ளன. தற்போது தனியார் பங்களிப்புடன் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்படுகிறது. இதற்கு ஆகும் மின் கட்டணத்தை தனியார் மூலம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி-கோவை ரோட்டில் நல்லப்பா தியேட்டர் சந்திப்பு, ஜமீன்ஊத்துக்குளி, ஆனைமலை, நா.மூ.சுங்கம் ஆகிய பகுதிகளில் நவீன தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டு வருகிறது.

எல்.இ.டி. விளக்குகள்

மேலும் விபத்துகளை தடுக்கும் வகையில் தூரத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு சாலைகள் சந்திப்பு உள்ளது என்பதை தெரிவிக்கும் வகையில் சிக்னல் கம்பத்தில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன.

தற்போது சிவப்பு, மஞ்சள் விளக்குகள் விட்டு விட்டு எரியும் வகையில் அமைக்கப்படுகிறது. தேவைப்பட்டால் நேர வசதியுடன் கூடிய வகையில் மாற்றி அமைக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story