பூலாம்பட்டி கதவணையில் நவீன விசைப்படகு இயக்கம்


பூலாம்பட்டி கதவணையில் நவீன விசைப்படகு இயக்கம்
x
சேலம்

எடப்பாடி:-

பூலாம்பட்டி கதவணையில் கூடுதல் நவீன விசைப்படகு இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பூலாம்பட்டி கதவணை

பூலாம்பட்டி அருகே காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீர் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் பூலாம்பட்டி காவிரி கதவனைப் பகுதியில் சேலம் மாவட்டம் பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை பகுதிகளை இணைக்கும் வகையில் நீர்வழி விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

மேலும் இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கதவணை பகுதியில் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு விசைப்படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

நவீன படகு

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் பூலாம்பட்டி கதவணை பகுதியில் நேற்று நவீன புதிய விசைப்படகு சேவை தொடங்கப்பட்டது. இதுகுறித்து அதன் பராமரிப்பாளர் சக்திவேல் கூறுகையில், சுமார் 10 குதிரை திறன் கொண்ட இந்த நவீன விசைப்படகில் பயணிகளுக்கான அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 7 முதல் 10 பயணிகள் வரை ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியும். அணை பரப்பில் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல முடியும் என்றார்.

புதிதாக பயன்பாட்டிற்கு வந்த விசைப்படகில் திரளான சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். தொடர்ந்து இப்பகுதியில் உள்ளது கதவணை் பாலம், படித்துறை, படகுதுறை, காவிரித்தாய் சன்னதி, பிரம்மாண்ட நந்திகேஸ்வரர் கோவில், கைலாசநாதர் திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று வழக்கத்தை விட கூடுதலான எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்திருந்தனர். இதனால் இப்பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேட்டூர்

மேட்டூர் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருந்தது. சேலம், ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணங்கள் மேட்டூர் வந்தனர். இவர்கள் ஒரு சிலர் மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவிலுக்கு சென்று ஆடு கோழி ஆகியவற்றை முனியப்ப சாமிக்கு பலியிட்டு வழிபட்டனர்.

சிறுவர், சிறுமிகள் விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனர். ஒரு சிலர் அணையின் வலதுகரை பகுதியில் பவள கோபுரத்திற்கு சென்று அணையின் முழுமையான தோற்றத்தை கண்டு களித்தார்கள். நேற்று ஒருநாள் மட்டும் பூங்கா மற்றும் பவள விழா கோபுரம் ஆகியவற்றின் நுழைவு கட்டணமாக ரூ. 41,250 வசூல் ஆக இருந்தது.


Next Story