ரூ.32 லட்சம் மதிப்பில் நவீன லேப்ராஸ்கோப்பி கருவி
பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கோவை மாவட்ட குடும்ப நல செயலகத்தின் மூலமாக ரூ.32 லட்சம் மதிப்புள்ள நவீன லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை கருவி வழங்கப்பட்டு உள்ளது. இந்த கருவியை மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் கவுரி தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். விழாவில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் மீரா, ஆஸ்பத்திரி கண்காணிப்பாள் டாக்டர் ராஜா மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், குடும்ப நல அறுவை சிகிச்சைக்கு நவீன லேப்ராஸ்கோப்பி கருவி வழங்கப்பட்டு உள்ளது. முதல் நாள் தொடக்கமாக 10 பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. வாரந்தோறும் வியாழக்கிழமை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடைபெறும். லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலம் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யும்போது பெண்கள் தங்களுடைய வழக்கமான பணிகளை செய்யலாம். பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்ய முடியாத பட்சத்தில் ஆண்களுக்கும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை அறுவை சிகிச்சை நிபுணர்களால் செய்யப்படுகிறது. குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பெண்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.600 மற்றும் ஆண்களுக்கு ரூ.1100 குடும்ப நலத்துறை மூலமாக வழங்கப்படுகிறது. இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.