வேளாண் கண்காட்சியில் நவீன கருவிகள்


தினத்தந்தி 16 July 2023 2:15 AM IST (Updated: 16 July 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

கொடிசியாவில் நடைபெறும் வேளாண் கண்காட்சியில் முன்னணி நிறுவனங்களின் நவீன கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. அதை திரளான விவசாயிகள் பார்வையிட்டனர்.

கோயம்புத்தூர்

கொடிசியாவில் நடைபெறும் வேளாண் கண்காட்சியில் முன்னணி நிறுவனங்களின் நவீன கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. அதை திரளான விவசாயிகள் பார்வையிட்டனர்.


வேளாண் கண்காட்சி


கோவை கொடிசியாவில் நாளை (திங்கட்கிழமை) வரை வேளாண் கண்காட்சி நடக்கிறது. இங்கு அமைக்கப்பட்டு உள்ள பல்வேறு அரங்குகளில் நவீன வேளாண் கருவிகள் காட்சிப்படுத் தப்பட்டு உள்ளன.

இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்கள், கொரியா, இஸ்ரேல், ஜப்பான், சுவீடன், பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தயாரித்த நவீன கருவிகளும் இடம் பெற்று உள்ளது.


அவற்றில் பயிர் அறுவடை எந்திரம், பண்ணை கருவிகள், வீட்டில் இருந்தே மின்மோட்டார்களை இயக்கும் கருவிகள் பார்வையாளர்களை கவர்ந்தது.

தேங்காயில் இருந்து பல்வேறு பொருட்களை தயாரித்து மதிப்பு கூட்டி விற்பனை செய்ய வெள்ளக்கிணறு லட்சுமி இண்டஸ்டிரீஸ் நிறுவனம் நவீன எந்திரங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதை பலரும் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.


தேங்காய் பால் தயாரிப்பு


இது குறித்து லட்சுமி இண்டஸ்டிரீஸ் நிறுவன உரிமையாளர் சுப்புராஜ் கூறியதாவது:-


வீடுகளுக்கு தேவையான தேங்காய் பால் தயார் செய்யும் சிறிய எந்திரங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான பெரிய எந்திரங்கள் வரை தயாரித்து வருகிறோம்.

இதன் மூலம் 22 வகையான எண்ணெய் வகைகளை தயாரிக்க முடியும். வீடுகளுக்கு தேவையான எந்திரங்கள் ரூ.16,500 முதல் விற்பனை செய்யப்படு கிறது.

ரூ.1 கோடி மதிப்புள்ள பெரிய எந்திரங்களும் தயார் செய்து, 48 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். இதற்கு மத்திய அரசின் திட்டத்தில் 35 சதவீதம் மானியம் அளிக்கப்படுகிறது.

கண்காட்சி நடைபெறும் 4 நாட்களும் 10 சதவீதம் தள்ளுபடியில் எந்திரங்கள் விற்பனை செய்யப்படுகிறது.


இவ்வாறு அவர் கூறினார்.


கன்ட்ரோல் பேனல் கருவிகள்


கோவை சரவணம்பட்டியை சேர்ந்த ஓஸ்மியம் நிறுவனம் கன்ட்ரோல் பேனல் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. அந்த நிறுவனம் தங்களின் தயாரிப்புகளை வேளாண் கண்காட்சியில் காட்சிப்படுத்தி உள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் கூறுகையில், வீட்டில் இருந்தபடியே விவசாய தோட்ட மோட்டார்களை செல்போன் மூலம் இயக்கும் மொபைல் ஸ்டார்ட்டர் கருவி, ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இல்லாவிட்டால் அதற்கு ஏற்றவாறு மோட்டார்களை இயக்கும் கருவி, சொட்டு நீர்பாசனத்துக்கான வயர்லெஸ் ஆட்டோமேசன் கருவி போன்றவற்றை தற்போதைய காலத்துக்கு ஏற்ப பேனல் கட்டுப்பாட்டு கருவிகளை தயாரித்து வழங்குகிறோம்.

இங்கு அவற்றை 30 முதல் 35 சதவீதம் சலுகை விலையில் விற்பனை செய்கிறோம் என்றனர்.


40 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்


வேளாண் கண்காட்சியை நேற்று முன்தினம் 15 ஆயிரம் பேர், நேற்று 2-வது நாளாக 25 ஆயிரம் பேர் என 2 நாளில் மொத்தம் 40 ஆயிரம் பேர் பார்வையிட்டு உள்ளனர்.


இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) கண் காட்சி நடைபெறுகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகமாக வரும் என்று எதிர்பார்ப்பதாக கொடிசியா தலைவர் திருஞானம் தெரிவித்தார்.


Next Story