மோகனூர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 34 பேருக்கு ரூ.7½ லட்சம் நிவாரண நிதி-அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்
மோகனூரில் நடந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 34 பேருக்கு ரூ.7½ லட்சம் நிவாரண நிதியை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
மோகனூர்:
மோகனூரில் தீ விபத்து
மோகனூர் மேட்டுத்தெருவில் கடந்த 31-ந் தேதி அன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர். பல வீடுகள் சேதம் அடைந்தன.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட 34 பேருக்கு பேரிடர் மேலாண்மை நிதி மற்றும் மாவட்ட கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து ரூ.7 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி மோகனூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார். நாமக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
34 பேருக்கு நிவாரண நிதி
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 34 பேருக்கு நிவாரண நிதிகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மோகனூர் மேட்டுத்தெருவில் கடந்த மாதம் 31-ந் தேதி அதிகாலை நடந்த தீ விபத்து குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. மாவட்டத்தில் இதுவரை இதுபோன்ற விபத்து நிகழவில்லை. முதற்கட்ட விசாரணையில், அனுமதியின்றி ஒரு குடும்பம் பட்டாசு கிடங்கு அமைத்திருந்தார்கள். தில்லைகுமார் என்பவர் நாட்டு பட்டாசுகள், தவிர வெடி பட்டாசுகளும் அவரது வீட்டில் வைத்திருந்தார்.
கடும் நடவடிக்கை
இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திடீரென்று எதிர்பாராத விதமாக தீப்பற்றி உயிர் சேதம் ஏற்படும் அளவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே நாமக்கல் மாவட்டத்தில் வருங்காலத்தில் இதுபோன்று உரிய அனுமதியின்றி பட்டாசுகளை வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, மோகனூர் தாசில்தார் ஜானகி, மோகனூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நவலடி, மாநில விவசாய தொழிலாளர் அணி இணைச்செயலாளர் கைலாசம், பேரூராட்சி தலைவர் வனிதா மோகன் குமார், துணை தலைவர் சரவணன் குமார், தி.மு.க. பேரூர் செயலாளர் செல்லவேல், மற்றும் கருமண்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் உடையவர், குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.