நெல்லுக்கான ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்
நேரடி கொள்முதல் நிலையங்களில் குறுவை நெல்லுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என நாகை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேரடி கொள்முதல் நிலையங்களில் குறுவை நெல்லுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என நாகை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெற்களஞ்சியம்
டெல்டா மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் விளங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம்.
இதற்கு முக்கிய ஆதாரமாக காவிரி தண்ணீர் உள்ளது. நாகை மாவட்டத்தில் நடப்பாண்டு சுமார் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
வறட்சியால் பாதிப்பு
ஆனால் காவிரி ஆற்றில் போதிய அளவு தண்ணீர் திறக்கப்படாததால் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர் வறட்சியால் பாதிக்கப்பட்டது.
எஞ்சிய பயிர்களை மோட்டார் பம்பு செட்டுகள் மூலமாகவும், நீர்நிலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை எஞ்சின் மூலமாக வயலுக்கு பாய்ச்சியும் தற்போது விவசாயிகள் அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழையில் நனைந்த நெல்மணிகள்
இந்த நிலையில் அறுவடை நேரத்தில் பெய்த மழையால் காய வைத்த நெல்மணிகள் நனைந்து போனது. இவ்வாறு மழையில் நனைந்த நெல்லை விவசாயிகள் சாலையில் போட்டு காய வைத்து வருகின்றனர். இதனால் கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லையே என்று நாகை மாவட்ட விவசாயிகள் புலம்பி கொண்டு இருக்கின்றனர். குறிப்பிட்ட அளவுக்கு மேல் நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் கொள்முதல் நிலையத்தில் நெல்லை எடுக்க மறுக்கின்றனர்.
தண்ணீர் இன்றி வறட்சியால் கஷ்டப்பட்டு காப்பாற்றி வந்த நெல்மணிகள் கடைசி நேரத்தில், ஈரப்பதத்தால் கை விரித்து விட்டதே என்று நாகை விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காயவைப்பதில் சிரமம்
நாகை மாவட்ட வேளாண் உற்பத்தியாளர் குழு உறுப்பினர் பாஸ்கரன் கூறும்போது:- நாகை மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டது. வறட்சி பாதிப்புக்காக அரசு அறிவித்த நிவாரண தொகையும் தற்போது வரை வந்து சேரவில்லை.
இருந்தும் பல்வேறு சிரமங்களை தாண்டி அறுவடை செய்தால், திடீரெ பெய்த மழையால் காய வைத்த நெல் மணிகள் நனைத்து விட்டன. மேலும் தற்போது விட்டு, விட்டு பெய்து வரும் மழையால் நெல்மணிகளை காய வைப்பதில் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறோம்.
22 சதவீதமாக உயர்த்த வேண்டும்
எனவே நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும். அப்போதுதான் நஷ்டத்தில் இருந்து விவசாயிகள் ஓரளவாவது தப்பிக்க முடியும் என்றார்.