கேட்காமலேயே கடன் வழங்கி பணம் கேட்டு பெண்ணுக்கு மிரட்டல்


கேட்காமலேயே கடன் வழங்கி பணம் கேட்டு பெண்ணுக்கு மிரட்டல்
x

ராமநாதபுரம் அருகே இளம்பெண்ணிடம் கேட்காமலேயே கடன் வழங்கி பணம் கேட்டு படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய மர்ம கும்பல் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் அருகே இளம்பெண்ணிடம் கேட்காமலேயே கடன் வழங்கி பணம் கேட்டு படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய மர்ம கும்பல் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடன் செயலி

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஓரிக்கோட்டை அருகே உள்ளது சாந்திபுரம். இந்த ஊரை சேர்ந்தவர் 30 வயது பெண். இவரது கணவர் வெளியூரில் வேலை செய்து வருகிறார்.

இதன்காரணமாக அந்த பெண் வீட்டின் அவசர தேவைக்காக பணம் தேவைப்படும்போது ஆன்லைன் கடன் செயலிகளின் மூலம் பணம் பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி கடன் பெறுவதற்காக செயலி ஒன்றினை பதிவிறக்கம் செய்துள்ளார். அப்போது அவர் கடன் எதுவும் விண்ணப்பித்து பெறாமலேயே அவரின் வங்கி கணக்கிற்கு ரூ.2ஆயிரத்து 275 வரவு வைக்கப்பட்டு உள்ளது. மீண்டும் வாட்ஸ்அப் எண்ணிற்கு பணம் செலுத்தாமல் உள்ளதாக தகவல் வந்ததால் அந்த செயலியில் கடன் பெற்ற தொகையை செலுத்தி வந்துள்ளார்.

இவ்வாறு செலுத்திய நிலையிலும் அவர் கடன் தொகை செலுத்தவில்லை என்று கூறி கடன் தொகை அதிகமாகி கொண்டே வந்துள்ளதால் அதனை செலுத்த முடியாமல் திணறி உள்ளார். ஒரு கட்டத்தில் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் கடன் தொகையை செலுத்தாமல் ஏமாற்றி வருகிறீர்கள் என்று ஆபாசமாக பேசியதோடு உடனடியாக செலுத்தாவிட்டால் உங்களின் புகைப்படத்தை ஆபாசமாக இணையதளத்தில் பதிவு செய்துவிடுவதாக மிரட்டி உள்ளனர்.

இதனால் பதட்டமடைந்த அந்த பெண் அவர்கள் கேட்ட பணத்தினை உறவினர்களிடம் பெற்று மொத்தமாக ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் செலுத்தி உள்ளார். ஆனால், அதோடு விடாமல் இதேபோன்று தொடர்ந்து கூறி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். பணத்தை கொடுக்க தாமதித்த போது அவரின் படத்தினை ஆபாசமாக சித்தரித்து அவரின் கணவர் எண்ணிற்கும், உறவினர்களின் எண்ணிற்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

வழக்குப்பதிவு

எனவே, கடன் செயலியை போலியாக உருவாக்கி கேட்காமலேயே சிறிதளவு தொகையை வழங்கி அதற்கான வட்டி, அசல் என்ற முறையில் கேட்டு மிரட்டி அவரின் வாட்ஸ்அப் எண்ணில் உள்ள படத்தினை எடுத்து ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டி வரும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி அந்த பெண் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story