சேலம் அருகேஓடும் ரெயிலில் பெண்களிடம் நகை,பணம் 'அபேஸ்'; கொள்ளையன் கைது


சேலம் அருகேஓடும் ரெயிலில் பெண்களிடம் நகை,பணம் அபேஸ்; கொள்ளையன் கைது
x
சேலம்

சூரமங்கலம்

சேலம் அருகே ஓடும் ரெயிலில் பெண்களிடம் நகை, பணம் அபேஸ் செய்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

பெண்களிடம் கைவரிசை

கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாதேவபுரா பகுதியில் வசித்து வருபவர் சாய்குமார். இவருடைய மனைவி சாந்தி (வயது 61). இவர் கடந்த மாதம் 20-ந் தேதி தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.சி. பெட்டியில் பயணம் செய்தார். இந்த ரெயில் அன்று இரவு 1 மணியளவில் சேலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது சாந்தி வைத்திருந்த கைப்பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதை யாரோ மர்ம நபர் அபேஸ் செய்து விட்டார்.

இதில் 7 பவுன் நகை, 40 கிராம் வெள்ளி, ரூ.5 ஆயிரம், ரூ.1.39 லட்சம் மதிப்புள்ள ஐபோன், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஐ பேட், ஏ.டி.எம். கார்டு, பான் கார்டு, வங்கி லாக்கர் சாவி என மொத்தம் ரூ.4 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் இருந்தன.

இதேபோல் அந்த ரெயிலில் ஏ.சி. பெட்டியில் பயணம் செய்த பெங்களூரு சன்னா சந்திரா பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி காயத்ரி (44) என்பவரின் கைப்பையும் திருட்டு போய் இருந்தது. இதில், 6 கிராம் தங்க நகை, ரூ.5 ஆயிரம், 2 செல்போன் என ரூ.54 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் இருந்தன. ரெயிலில் நடந்த இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து சேலம் ரெயில்வே போலீசில் அந்த பெண்கள் புகார் அளித்தனர்.

கண்காணிப்பு கேமரா

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ரெயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சந்தேகப்படும்படியாக முதியவர் ஒருவர் தூத்துக்குடி-மைசூரு ரெயிலில் இருந்து இறங்கி செல்வது தெரியவந்தது.

அந்த நபர் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் அவர், திருச்சி ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேணுகோபால் (66) என்பதும், அவர் மீது ஏற்கனவே மதுரையில் ஒரு திருட்டு வழக்கு இருப்பதும் தெரியவந்தது.

கைது

இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர் அந்த 2 பெண்களிடம் கைப்பைகளை திருடியது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 8 பவுன் நகை, 40 கிராம் வெள்ளி, ஐ பேட் என ரூ.3 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பிலான திருட்டு போன பொருட்களை மீட்டனர்.

ஐ போன் உள்ளிட்ட சில பொருட்களை அவர் வெளியில் விற்பனை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் கொள்ளையன் வேணுகோபாலிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Next Story