போட்டோகிராபரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி
போட்டோகிராபரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
ராமநாதபுரம் வடக்குத்தெரு அய்யாக்கண்ணுசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன் (வயது 45). இவர் ராமநாதபுரத்தில் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார். இவர் தனது குடும்பத்திற்கு தேவையான பொருட்களை ஆன்லைன் வர்த்தகத்தில் ஆர்டர் செய்து பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த மாதம் 25-ந் தேதி அவரின் முகவரிக்கு கொல்கத்தாவிலிருந்து பதிவு தபால் ஒன்று வந்தது. அதனை பிரித்து அதில் இருந்த வர்த்தக நிறுவனத்தின் பெயரிலான கார்டினை சுரண்டி பார்த்தபோது அதில் ரூ.8 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த சவுந்திரபாண்டியன் அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியபோது ஆங்கிலம் கலந்த தமிழில் பேசிய மர்ம நபர் தங்களின் நிறுவனத்தின் 14-வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடந்த குலுக்கலில் நீங்கள் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பரிசு பெற்றுள்ளதாகவும், அதனுடன் சேர்த்து ரூ.8 லட்சத்தையும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நபர் கூறியபடி வங்கி கணக்கிற்கு பல்வேறு முறைகளில் பணத்தை சவுந்திரபாண்டியன் செலுத்தினார். இவ்வாறு மொத்தம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்து 600 செலுத்தியுள்ளார். ஆனாலும் மர்மநபர் மீண்டும் பணம் கேட்டார்.
இதனால் சந்தேகம் அடைந்த சவுந்திரபாண்டியன் தனது பணம் குறித்து கேட்டார். அப்போது பதிலளிக்காமல் மர்ம நபர் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.