ரூ.1 லட்சம் - நகைகள் திருட்டு
பட்டுக்கோட்டையில், கணவரை பார்க்க சிங்கப்பூர் சென்ற பெண் வீட்டில் ரூ. 1 லட்சம் மற்றும் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
பட்டுக்கோட்டை,
பட்டுக்கோட்டையில், கணவரை பார்க்க சிங்கப்பூர் சென்ற பெண் வீட்டில் ரூ. 1 லட்சம் மற்றும் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சிங்கப்பூர் சென்றாா்
பட்டுக்கோட்டை நகர் சிவக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ். இவருடைய மனைவி ஜெயசீலி(வயது50). சார்லஸ் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் ஜெயசீலி மற்றும் அவருடைய மகள் இருவரும் கோடை விடுமுறையை கழிக்க சிங்கப்பூருக்கு சென்றுள்ளனர். அப்போது தனது வீட்டின் சாவியை அருகில் வசித்து வரும் தந்தையிடம் கொடுத்து சென்றார். அவரது தந்தை வாரம் ஒரு முறை மகள் வீட்டுக்கு சென்று பார்த்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு ெசன்று பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் வைத்திருந்த பொருட்கள் திருட்டு போய் இருந்தது.
மடிக்கணினி
இது குறித்து அவருடைய தந்தை கொடுத்த தகவலின் பேரில், சிங்கப்பூரில் இருந்து வீட்டிற்கு வந்த ஜெயசீலி வீட்டில் உள்ள பொருட்களை சோதித்து பார்த்துள்ளார். அப்போது பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சம், 19 கிராம் தங்க நகைகள், மடிக்கணினி கேமரா உள்ளிட்ட ரூ.2½ லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.இது குறித்து ஜெயசீலி பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை- பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.